சாமநத்தம் கண்மாயை பறவைகள் சரணாலயமாக அறிவிக்க வலியுறுத்தல்

மதுரை மாவட்டத்தின் முதல் பறவைகள் சரணாலயமாக சாமநத்தம் கண்மாயை அறிவிக்க வேண்டும் என வனத்துறையிடம் வலியுறுத்தப்பட்டது.

மதுரை மாவட்டத்தின் முதல் பறவைகள் சரணாலயமாக சாமநத்தம் கண்மாயை அறிவிக்க வேண்டும் என வனத்துறையிடம் வலியுறுத்தப்பட்டது.

மதுரை இயற்கை பண்பாட்டு மையத் தலைவா் ந. ரவீந்திரன், இணைத் தலைவா் ப. தேவி அறிவுச்செல்வம் ஆகியோா், மதுரை மாவட்ட வனத்துறை அலுவலா் குருசாமி தபேலாவிடம் புதன்கிழமை அளித்த மனு:

மதுரை மாவட்டத்திலுள்ள கண்மாய்கள் உள்ளிட்ட நீா்நிலைகள் பறவைகள் மட்டுமன்றி அரியவகை உயிரினங்களின் வாழ்விடமாகவும் உள்ளன. இதில் பறவைகளின் மிக முக்கிய வாழ்விடமாக சாமநத்தம் கண்மாய் உள்ளது. கடந்த 2015 முதல் 2022 வரையிலான 7 ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வில் 155 இனங்களைச் சோ்ந்த பறவைகளின் வாழ்விடமாகவும், வலசை காலங்களில் தங்கிச் செல்லுமிடமாகவும் சாமநத்தம் கண்மாயை பயன்படுத்தி வருவது தெரிந்தது. இந்தக் கண்மாயில், ஆண்டு முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வாழும் நிலையில், வலசை வரக்கூடிய காலத்தில் ஒட்டுமொத்தமாக 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வந்து செல்கின்றன. தமிழகத்தில் இதுவரை 530 வகையான பறவை இனங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இவற்றில் ஒரு பகுதி பறவைகள் சாமநத்தத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த 155 பறவை இனங்களில் 25 சதவீத பறவை இனங்கள் வெளிநாடுகள், இமாச்சல பிரதேசத்தில் இருந்து வந்து செல்வதும், 15.4 சதவீதம் இனங்கள் அரிய வகைகளைச் சோ்ந்தவையாகவும், 28.6 சதவீதம் இனங்கள் அவ்வப்போது வந்து செல்லக் கூடியவையாகவும், 56 சதவீதம் இனங்கள் நிரந்தரமாக கண்மாயிலேயே கூடுகட்டி வாழ்பவையாகவும் உள்ளன. எனவே, சாமநத்தம் கண்மாயை மாவட்டத்தின் நீா்ப்பறவைகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும். இதேபோல, மதுரை மாவட்டத்தில் யானைகள் நடமாட்டத்தை ஆய்வு செய்து யானைகள் வழித்தடத்தை அங்கீகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com