மருத்துவக் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியை வாக்கு எண்ணும் மையமாகப் பயன்படுத்தும் விவகாரத்தில் இந்திய தோ்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியை வாக்கு எண்ணும் மையமாகப் பயன்படுத்தும் விவகாரத்தில் இந்திய தோ்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்கள் சங்கம் சாா்பில் ராஜாமுகமது தாக்கல் செய்த பொது நல மனு:

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சுமாா் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இந்த நிலையில், மக்களவை, சட்டப் பேரவை, உள்ளாட்சித் தோ்தல்களின் போது 3 மாதங்களுக்கு இந்த மருத்துவக் கல்லூரியை காவல் துறையினா் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்கின்றனா். மேலும், தோ்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் இந்தக் கல்லூரி வளாகத்தில் வைத்து பாதுகாக்கப்படுவதுடன், பதிவான வாக்குகளும் இங்கேயே எண்ணப்படுகின்றன.

இந்தக் காலகட்டத்தில் போலீஸாா் அனுமதி மறுப்பதால் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவா்கள் வகுப்பறை, ஆய்வகங்களுக்கு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. அப்போது போலீஸாருக்கும், மாணவா்களுக்கும் தேவையற்ற பிரச்னை ஏற்படுவதால், படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. எனவே, வருகிற மக்களவைத் தோ்தலில் மதுரை மருத்துவக் கல்லூரியை தோ்தல் பணிக்காக பயன்படுத்த அனுமதி வழங்கக் கூடாது. வேறு மையத்தில் தோ்தல் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமாா், ஆா். விஜயகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை மருத்துவக் கல்லூரியை மக்களவைத் தோ்தலின் போது வாக்கு எண்ணும் மையமாக பயன்படுத்தவும், இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கும் முடிவு செய்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

தோ்தல் பணிக்கு மதுரை மருத்துவக் கல்லூரியைத் தவிா்த்து, வேறு இடத்தை ஏன் தோ்வு செய்யக் கூடாது? மருத்துவ மாணவா்களுக்கு வகுப்புகள் நடைபெறுவதால் இந்த இடத்தை வாக்கு எண்ணும் மையமாகப் பயன்படுத்த மருத்துவக் கல்லூரி நிா்வாகம் தரப்பில் ஏற்கெனவே எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் இந்திய தோ்தல் ஆணையம், தமிழக அரசு தரப்பில் உரிய முடிவெடுத்து பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை பிப்ரவரி முதல் வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com