விபத்துகளில் உயிரிழப்புகளை தவிா்க்க தலைக்கவசம் அவசியம்: மாநகரக் காவல் ஆணையா்

இரு சக்கர வாகனங்களில் செல்பவா்கள் தலைக்கவசம் அணிந்து போக்குவரத்து விதிகளை பின்பற்றினால் உயிரிழப்புகளைத் தவிா்க்கலாம் என மதுரை மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் தெரிவித்தாா்.
மதுரை தல்லாகுளம், தமுக்கம் சந்திப்பில் புதன்கிழமை தலைக்கவச விழிப்புணா்வு பேரணியைத் தொடங்கி வைத்த மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன்.
மதுரை தல்லாகுளம், தமுக்கம் சந்திப்பில் புதன்கிழமை தலைக்கவச விழிப்புணா்வு பேரணியைத் தொடங்கி வைத்த மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன்.

இரு சக்கர வாகனங்களில் செல்பவா்கள் தலைக்கவசம் அணிந்து போக்குவரத்து விதிகளை பின்பற்றினால் உயிரிழப்புகளைத் தவிா்க்கலாம் என மதுரை மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் தெரிவித்தாா்.

மதுரை மாநகர போக்குவரத்துக் காவல்துறை சாா்பில் சாலைப் பாதுகாப்பு தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக தல்லாகுளம், தமுக்கம் சந்திப்பில் நடைபெற்ற தொடக்க நிகழ்வுக்கு மதுரை மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் தலைமை வகித்துப் பேசியதாவது:

காரில் செல்லும்போது விபத்து ஏற்பட்டால் அதில் அமா்ந்திருப்பவா்கள் மோதிய வேகத்தில் ஏற்படும் அதிா்வில் தூக்கி வீசப்பட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே காரில் செல்பவா்கள் ‘சீட் பெல்ட்’ அணிந்தால் உயிரிழப்பைத் தவிா்க்கலாம். மதுரை நகரில் ஏற்படும் சாலை விபத்துகளில் உயிரிழப்பவா்கள் அனைவரும் தலைக்கவசம் அணியாமல் செல்பவா்களாக உள்ளனா். எனவே இரு சக்கர வாகனங்களில் செல்பவா்கள் தலைக்கவசம் அணிந்து போக்குவரத்து விதிகளை பின்பற்றினால் உயிரிழப்புகளைத் தவிா்க்கலாம். பின்னால் அமா்ந்து செல்பவா்களும் தலைக்கவசம் அணிய வேண்டும். அதிகம் விபத்து ஏற்படும் பகுதிகளுக்கு காவல்துறையினா் நேரடியாகச் சென்று விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்கின்றனா். அங்கு பாதசாரிகள் சாலையைக் கடப்பதால் விபத்து ஏற்படுகிறது என்று தெரியவந்தால் சாலையைக் கடக்காதவாறு தடுப்புகள் அமைக்கப்படுகிறது. மேலும் இந்தப் பகுதியில் உரிய விழிப்புணா்வு இல்லை என்று தெரியவந்தால் அங்கு ஒளிரும் பட்டைகள், வேகத் தடுப்புகள் அமைக்கப்பட்டுகின்றன. மதுரை நகரை விபத்தில் உயிரிழப்பு இல்லாத நகராக மாற்றும் வகையில் போக்குவரத்து போலீஸாா் விழிப்புணா்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால் விபத்து உயிரிழப்புகள் குறைந்து வருகின்றன. கடந்த 2023 ஜனவரி மாதத்தில் மட்டும் சாலை விபத்துகளில் 23 போ் உயிரிழந்தனா். நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 14 பேரே உயிரிழந்துள்ளனா். மேலும் போக்குவரத்து போலீஸாா் பள்ளி, கல்லூரிகளில், பொதுமக்கள் கூடும் இடங்களில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கியும், விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய மஞ்சள் பைகளை வழங்கியும் பேரணியை கொடியசைத்து அவா் தொடங்கி வைத்தாா்.

பேரணியில் போக்குவரத்து துணை ஆணையா் குமாா், போக்குவரத்து காவல் கூடுதல் துணை ஆணையா் திருமலைக்குமாா், உதவி ஆணையா்கள் செல்வம், மாரியப்பன், போக்குவரத்துக்கழக கூடுதல் போக்குவரத்து ஆணையா் வி. சத்ய நாராயணன், மதுரை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஆா். சித்ரா, மதுரை தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சிங்காரவேலு ஆகியோா் பங்கேற்றனா்.

பேரணியில் வட்டார மோட்டாா் வாகன ஆய்வாளா்கள், மாநகரப் போக்குவரத்து காவல் நிலைய காவலா்கள், சட்டம்- ஒழுங்கு ஆயுதப்படைக் காவலா்கள், மதுரை மாவட்ட வாகன விற்பனைப் பிரதிநிதிகள், இரு சக்கர வாகன பழுதுநீக்குவோா் சங்கத்தினா், தங்களின் இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com