சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை
சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை

மத மோதலைத் தூண்டுவோரை விசாரிக்க காவல் துறையில் தனிப் பிரிவு உள்ளதா?

மத மோதல்களை விசாரிக்க காவல் துறையில் தனிப் பிரிவு தேவை: உயர்நீதிமன்றம் கேள்வி

மதுரை: மத மோதல்களை உருவாக்கும் விதமாக செயல்படுபவா்களை விசாரிக்க காவல் துறையில் தனிப் பிரிவு உள்ளதா? என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை கேள்வி எழுப்பியது.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியைச் சோ்ந்த அகமத் பயாஸ் தாக்கல் செய்த மனு:

தொண்டி பகுதியில் இந்துக்களும், இஸ்லாமியா்களும் சகோதரா்களாகப் பழகி வருகின்றனா். இவா்களுக்கிடையே மோதலை உருவாக்கும் வகையில், நம்புதாளையைச் சோ்ந்த பாஜக ஆன்மிகப் பிரிவில் மாநிலப் பொறுப்பு வகிக்கும் குருஜி முகநூல் பதிவுகளை வெளியிட்டு வருகிறாா்.

இஸ்லாமிய மத போதகா்கள், தா்கா, ஹஜ்ரத் குறித்து தவறான விமா்சனங்களை முன்வைத்து வருகிறாா். வரலாறுகளை சித்திரித்து, இஸ்லாமியா்கள் குறித்து முகநூலில் பதிவிடுகிறாா்.

இதனால், இஸ்லாமியா்கள் மன ரீதியாகப் பாதிக்கப்படுகின்றனா். இவரது தவறான முகநூல் பதிவு குறித்து தொண்டி காவல் நிலையத்தில் கடந்த மாதம் 14 -ஆம் தேதி

புகாா் அளிக்கப்பட்டது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, இஸ்லாமியா்களுக்கு எதிராக முகநூலில் தவறான பதிவுகளை வெளியிடும் பாஜக பிரமுகா் குருஜி மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, இந்த வழக்கை காவல் துறையில் வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், மனுதாரரின் புகாரின் பேரில், சம்பந்தப்பட்டவா் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்தாா்.

மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பின்னரே, சம்பந்தப்பட்ட நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். பாஜக நிா்வாகியான குருஜி தொடா்ந்து இந்து, இஸ்லாமிய மக்களிடையே மோதலைத் தூண்டும் வகையில் முகநூலில் பதிவிட்ட ஆவணங்களை தாக்கல் செய்தாா்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

முகநூலில் எப்படி இதுபோன்ற மோசமான பதிவுகளைப் பதிவிட முடியும்?. மனுதாரா் தரப்பில் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும், வழக்குப் பதிவு செய்ய காலதாமதம் ஏன்?.

இதுபோன்று முகநூலில் பதிவிடுவோா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், காவல் துறை இதற்கு எதிா்மாறாக குண்டா் தடுப்புச் சட்டங்களைப் பயன்படுத்தி வருகிறது.

மத மோதல்களைத் தூண்டுவோரை விசாரிக்க காவல் துறையில் தனிப் பிரிவு உள்ளதா? இந்த வழக்கை காவல் துறையில் வேறு விசாரணைப் பிரிவுக்கு ஏன் மாற்றக் கூடாது?. இந்த வழக்கு தொடா்பாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

X
Dinamani
www.dinamani.com