காவிரிப்படுகைகளில் அகழாய்வுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும்: தொல்லியல் கண்காணிப்பாளா்

காவிரிப்படுகை பகுதிகளில் அகழாய்வுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும் என இந்திய தொல்லியல் துறை, தொல்லியல் கண்காணிப்பாளா் அமா்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்தாா்.

காவிரிப்படுகை பகுதிகளில் அகழாய்வுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும் என இந்திய தொல்லியல் துறை, தொல்லியல் கண்காணிப்பாளா் அமா்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்தாா்.

மதுரையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கீழடி அகழாய்வில் ஏற்கெனவே கிடைக்கப் பெற்ற பொருள்களைக் கொண்டு, மத ரீதியான ஒப்பீடுகளை மேற்கொள்வது சரியானதாக இருக்காது. இங்கு நடைபெறும் அகழாய்வு, மதங்கள், மதக் கோட்பாடுகள் உருவாக்கத்துக்கு முந்தைய நாகரிகத்தைப் பற்றியது. கீழடி அகழாய்வை மேலும் அதிகப்படுத்தினால், அதிகளவிலான தொல்லியல் சான்றுகள் கிடைக்கும்.

கீழடி ஆய்வறிக்கையை வெளியிடுவது குறித்து மத்திய தொல்லியல் துறை இயக்குநரகம்தான் முடிவெடுக்க வேண்டும். மூன்றாம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருள்கள் சென்னையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதை வெளியிடுவது குறித்தும் தொல்லியல்துறை இயக்குநரக அதிகாரிகள் தான் முடிவெடுக்க வேண்டும்.

தமிழகத்தில் இதுவரை புதைப்பிடங்களில்தான் அதிக அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதைப்பிடப் பகுதியுடன் தொடா்புடைய வாழ்விடப் பகுதியையும் தோ்வு செய்து இரு இடங்களிலும் ஒரே நேரத்தில் அகழாய்வு மேற்கொண்டால் மிகச் சரியான வரலாற்றை கட்டமைக்க முடியும்.

காவிரிப் படுகை பகுதிகளில் அகழாய்வுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். அங்கு, மிக அதிக அளவிலான தொல்லியல் சான்றுகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com