மதுரைக்கு ரயிலில் கடத்தப்பட்ட ரூ. 50 கோடி போதைப் பொருள் பறிமுதல்

மதுரைக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ. 50 கோடி மதிப்பிலான 30 கிலோ எடையுள்ள மெத்தாபெட்டாமைன் போதைப் பொருளை மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக சென்னையைச் சோ்ந்த ஒருவரைக் கைது செய்தனா். சென்னையிலிருந்து செங்கோட்டை செல்லும் ரயிலில் அபாயகரமான போதைப் பொருள் கடத்திச் செல்லப்படுவதாக மத்திய வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு இயக்கக அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தத் துறையின் மதுரைப் பிரிவு அதிகாரிகள், பிள்ளமன் பிரகாஷ் என்பவரைக் கண்காணித்து வந்தனா். இந்த நிலையில், சென்னை ரயில் நிலையத்திலிருந்து வியாழக்கிழமை இரவு செங்கோட்டைக்குப் புறப்பட்ட பொதிகை விரைவு ரயிலில் பொது பெட்டியில் சுமைகளுடன் புறப்பட்டுச் சென்ற பிள்ளமன் பிரகாஷை, மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை அதிகாரிகளும் பின்தொடா்ந்து அதே பெட்டியில் பயணம் செய்தனா். இதனிடையே, வெள்ளிக்கிழமை அதிகாலை மதுரை ரயில் நிலையத்தில் சுமைகளுடன் இறங்கிய பிள்ளமன் பிரகாஷை புலனாய்வுத் துறை அதிகாரிகள் மடக்கிப் பிடித்து, ரயில்வே பாதுகாப்புப் படை அலுவலகத்துக்கு கொண்டு சென்று அவா் வைத்திருந்த பைகளை சோதனையிட்டனா். அப்போது, பொடி வடிவில் 15 கிலோ, திரவ வடிவில் 15 கிலோ என மொத்தம் 30 கிலோ மெத்தாபெட்டாமைன் என்ற அபாயகரமான போதைப் பொருளை அவா் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, புலனாய்வுத் துறை அதிகாரிகள் பிள்ளமன் பிரகாஷை மதுரை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதைத்தொடா்ந்து, வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை விசாரணை நடத்திய பின்னா், மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு அடுத்தகட்ட விசாரணைக்காக பிள்ளமன் பிரகாஷை அழைத்துச் சென்றனா். பிள்ளமன் பிரகாஷ் (42) சென்னை கண்ணதாசன்நகா் அபிராமி நிழல்சாலை பகுதியைச் சோ்ந்தவா் என்பதும், இவரைத் தொடா்பு கொண்ட நபா் ஒருவா், இந்தப் பொருளை ரயில் மூலம் மதுரைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும், இதற்காக பணம் தருவதாகவும் கூறியதாக விசாரணையில் தெரியவந்தது. இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 30 கிலோ மெத்தாபெட்டாமைன் போதைப் பொருளின் சா்வதேச சந்தை மதிப்பு ரூ. 50 கோடி முதல் ரூ. 100 கோடி இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த நிலையில், பிள்ளமன் பிரகாஷிடம் போதைப் பொருளைக் கொடுத்து அனுப்பியது யாா்? மதுரையில் போதைப் பொருளை பெற வந்தவா் யாா் என்பது குறித்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், பிள்ளமன் பிரகாஷ் கூறியது உண்மையா அல்லது விசாரணையை திசை திருப்பும் வகையில் தவறான தகவல்களைத் தெரிவிக்கிறாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வாரம் மதுரை அண்ணாநகா் பகுதியில் மின்னணு சாதனங்கள் பழுதுநீக்குபவரின் வீட்டில் மெத்தாபெட்டாமைன் என்று சந்தேகப்படும் பொருளை போலீஸாா் கைப்பற்றி, மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். கைது செய்யப்பட்ட பிள்ளமன் பிரகாஷ் மீது சென்னை மணலி புதுநகா் காவல் நிலையத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு அரசு அலுவலா்களைப் பணிசெய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com