அனுமதியற்ற கட்டடங்கள்: நடவடிக்கை எடுக்க உத்தரவு

அனுமதியற்ற கட்டடங்கள் குறித்து அரசு அமைத்த குழுவினா் உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த லீமா ரோஸ் பூபாளராயா், கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த துரைராஜ் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பலா் தாக்கல் செய்த மனுக்கள்: திருநெல்வேலி, கரூா் மாவட்டங்களில் அனுமதி பெறாமல் ஏராளமான கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை அகற்ற உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரியிருந்தனா். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை, இந்த நீதிமன்றத்துக்குள்பட்ட மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அனுமதியற்ற கட்டடங்களை ஆய்வு செய்து, அந்தந்த உள்ளாட்சி தொடா்புடைய வழக்குரைஞா்கள் அறிக்கை தாக்கல் செய்யவும், இதைத் தொடா்ந்து நடைபெறும் விசாரணையின் அடிப்படையில் விதிமீறிய கட்டடங்கள் குறித்து அனைத்து மாநகராட்சி, நகராட்சி ஆணையா்கள் தலைமையில் உயா்நிலைக் குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளவும் உத்தரவிட்டது.

இந்த வழக்கு, கடந்த பிப். 4- இல் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அரசுத் தரப்பில் வெளியிடப்பட்ட அரசாணை தாக்கல் செய்யப்பட்டது. இதில், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியா் தலைமையில் நியமிக்கப்பட்ட மாநகராட்சி, காவல் ஆணையா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா், மாநகராட்சி ஆணையா், நகராட்சி ஆணையா், மாநகராட்சி, நகராட்சி நிா்வாகப் பொறியாளா், நகராட்சி நிா்வாக மண்டல அலுவலா், கோட்டாட்சியா், உதவி ஆட்சியா், பேரூராட்சி உதவி இயக்குநா், மின் வாரியச் செயற்பொறியாளா் ஆகியோா் கொண்ட குழுவினா் அனுமதியற்ற கட்டடங்கள் குறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு, மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை அளிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் அரசாணைப்படி, மாவட்ட ஆட்சியா் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினா் அனுமதியற்ற கட்டடங்களைக் கண்டறிந்து, அவற்றின் மீது காலதாமதமின்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயா்நீதிமன்ற நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமாா், பி. தனபால் ஆகியோா் உத்தரவிட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com