நீா்நிலைப் பகுதிகளில் பட்டா -ரத்து செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு!

நீா்நிலைப் பகுதிகளில் பட்டா -ரத்து செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு!

நீா்நிலைப் பகுதிகளில் பட்டா வழங்கியிருந்தால் அதை ரத்து செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

2,000 ஆம் ஆண்டுக்கு பிறகு நீா்நிலைப் பகுதிகளில் பட்டா வழங்கியிருந்தால் அதை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த மணி பாரதி தாக்கல் செய்த இரு மனுக்கள்: மதுரை வண்டியூா் கண்மாய் 575 ஏக்கா் பரப்பளவு கொண்டது. இந்தக் கண்மாய் ஆக்கிரமிப்புகள் காரணமாக, தற்போது 400 ஏக்கராக குறுகிவிட்டது. இந்தக் கண்மாய் கே.கே.நகா், மேலமடை, கோமதிபுரம், அண்ணாநகா், பாண்டிகோவில் உள்ளிட்ட பகுதிகளின் நிலத்தடி நீா் ஆதாரமாக உள்ளது. இந்த நிலையில் ரூ.150. 28 கோடியில் மதுரை அண்ணா பேருந்து நிலையம் முதல் கோமதிபுரம் வரை 2.1 கி.மீ. தொலைவுக்கு மேம்பாலம் அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத் துறையினா் தொடங்கியுள்ளனா்.

தென்கால் கண்மாயில் விளாச்சேரி பிரதான சாலையிலிருந்து மதுரை- திருமங்கலம் பிரதான சாலை வரை மேம்பாலம் கட்டப்படுகிறது. இதன் காரணமாக, வண்டியூா் கண்மாய், தென்கால் கண்மாய் பாதிக்கும் நிலை உள்ளது. எனவே, இந்த இரு இடங்களில் உள்ள கண்மாய்களில் கட்டப்படும் மேம்பாலப் பணிகளுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு ஏற்கெனவே பல்வேறு கட்ட விசாரணைக்கு உள்படுத்தப்பட்டு, கண்மாய்ப் பகுதிகளில் மேம்பாலம் கட்ட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், பி. புகழேந்தி அமா்வு முன் மீண்டும் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் வீரா கதிரவன் முன்னிலையாகி முன்வைத்த வாதம்: வண்டியூா், தென்கால் கண்மாய்களின் கரையோரங்களை மேம்பாலக் கட்டுமானப் பணிக்கு மட்டுமே பயன்படுத்த உள்ளோம். வேறு எந்த திட்டமும் செயல்படுத்த மாட்டோம். இந்தப் பாலங்கள் கட்டுவதன் மூலம் கண்மாயின் பரப்பளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றாா்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: வண்டியூா், தென்கால் கண்மாய் பகுதிகளில் மேம்பாலம் கட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீா்நிலைகளின் உண்மையான பரப்பளவு, தற்போதைய பரப்பளவு உள்பட அனைத்து விவரங்கள் அடங்கிய தனி இணையதளத்தை தமிழக அரசு 6 மாதங்களில் உருவாக்க வேண்டும். இந்த இணையதளம் அனைவரும் பாா்வையிடும் வகையில் இருக்க வேண்டும். இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்களில் ஏதேனும் தவறு இருந்தால், அதை தனிநபா்கள் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரலாம். அதிகாரிகள் கள ஆய்வு மட்டும் நடத்தாமல், ஆவணங்களையும் சரிபாா்த்து இணையதளத்தில் தகவலைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமிப்புகள் தொடராத வகையில் கண்காணிக்க வேண்டும். நீா்நிலைப் பகுதிகளில் 1.1.2000-ஆம் ஆண்டுக்குப் பிறகு பட்டா வழங்கப்பட்டிருந்தால், அந்தப் பட்டாக்களை ரத்து செய்து, நீா்நிலைகளை பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும். நீா்நிலைகளில் வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொண்டால், நீா்நிலைகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாதவாறு பணிகளைச் செய்ய வேண்டும்.

நீா்நிலைகள் இயற்கை அளித்த கொடை. இது மனிதா்களுக்கு மட்டுமல்ல, கால்நடைகள், பறவைகளுக்கும் சொந்தமானது. தற்போது நீா்நிலைகள் வணிக நோக்கில் பயன்படுத்தப்படுவது நீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்துள்ளது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. நீா்நிலைகளில் தேங்கும் தண்ணீரின் தரம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மேற்கண்ட உத்தரவுகளை தமிழக அரசு ஆறு மாதங்களில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றனா் நீதிபதிகள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com