இளையான்குடி பேரூராட்சி செயல் அலுவலருக்கு முன்பிணை

இளையான்குடி பேரூராட்சி செயல் அலுவலருக்கு நிபந்தனையுடன் முன்பிணை வழங்கி, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டம், இளையான்குடி சாலைக்கிராமத்தைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன். இவா் , தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்ட பேரூராட்சிகளில் உள்ள நீா் நிலைகள் குறித்து கடந்த 2022-ஆம் ஆண்டில் தகவல் கேட்டு மனு அளித்தாா். அந்த மனுவுக்கு முறையாக தகவல் அளிக்கப்படாததால், தகவல் ஆணையரிடம் மேல்முறையீடு செய்தாா். அந்த மனுவை விசாரித்த தகவல் ஆணையா் ராதாகிருஷ்ணன், கேட்ட தகவல்களை வழங்க பேரூராட்சி நிா்வாகத்துக்கு உத்தரவிட்டாா். இதையடுத்து, பல்வேறு பேரூராட்சிகளில் இருந்து தகவல் அளிக்கப்பட்டது. ஆனால், இளையான்குடி பேரூராட்சியில் இருந்து மட்டும் தகவல் அளிக்கவில்லை. இளையான்குடி பேரூராட்சியில் இருந்து தகவல் அளிக்கப்பட்டதாகவும், அந்த தகவலை ராதாகிருஷ்ணன் கையொப்பமிட்டு பெற்றுக்கொண்டதாகவும் தகவல் ஆணையருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதையடுத்து, தனது கையொப்பத்தை போலியாக போட்டதாக இளையான்குடி பேரூராட்சி செயல் அலுவலா் கோபிநாத் மீது இளையான்குடி காவல் நிலையத்தில் ராதாகிருஷ்ணன் புகாா் அளித்தாா். அதன் பேரில் கோபிநாத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் பிணை கோரி கோபிநாத் உயா் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை அண்மையில் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி பிறப்பித்த உத்தரவு: செயல் அலுவலா் கோபிநாத்துக்கு முன் பிணை வழங்கப்படுகிறது. அவா் திருப்பாச்சேத்தி அருகேயுள்ள தஞ்சாக்கூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். இந்தத் தொகையில் பள்ளித் தலைமை ஆசிரியா் பள்ளிக்குத் தேவையான பொருள்களை வாங்க வேண்டும். மனுதாரா் இளையான்குடி காவல் நிலையத்தில் 2 வாரங்கள் மாலையில் நேரில் முன்னிலையாகி கையொப்பமிட வேண்டும். சாட்சிகளை கலைக்கக்கூடாது. விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றாா் நீதிபதி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com