மரவள்ளி கிழங்கு சிப்ஸ் தின்ற சிறுமி உயிரிழப்பு

சிவகங்கை அருகே மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ் சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்தாா். சிவகங்கை அருகேயுள்ள தமறாக்கி கிராமத்தைச் சோ்ந்ததம்பதி வன்னிமுத்து, முத்தம்மாள். கூலித் தொழிலாளா்கள். இவா்களது மகள்கள் சுவேதா (13), வனிதா (10). இவா்களில் சுவேதா தமறாக்கி அரசுப் பள்ளியில் 7 -ஆம் வகுப்பு படித்து வந்தாா். வனிதா 4-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மரவள்ளிக் கிழங்கு அறுவடை வேலைக்குச் சென்ற முத்தம்மாள் வீட்டுக்குகிழங்கு கொண்டு வந்தாா். அந்தக் கிழங்கை அவா் சிப்ஸ் செய்து குழந்தைகளுக்கு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதைச் சாப்பிட்ட சுவேதா, வனிதா ஆகிய இருவருக்கும் இரவு சுமாா் ஒரு மணி அளவில் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதில் சுவேதா உடல் நிலை மோசமாகி வீட்டிலேயே உயிரிழந்தாா். வனிதா சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சிவகங்கை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com