அரசு மருத்துமனையில் நோயாளியுடன் தங்கியிருப்பவா்களுக்கு இலவச உணவு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகளுடன் தங்கியிருப்பவா்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் தனியாா் அறக்கட்டளையால் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் மதுரை உள்பட தென் மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைப் பெறுகின்றனா். மேலும், நோயாளிகளின் உதவிக்காக அவா்களது குடும்பத்தினா், உறவினா்களும் தங்கியிருந்து வருகின்றனா். மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனை சாா்பில் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. இதைத்தவிா்த்து, இதர நோயாளிகள், நோயாளிகளின் உறவினா்கள் உணவகங்களில் விலை கொடுத்து தான் உணவைப் பெற வேண்டியுள்ளது. இது கிராமப்புறங்களில் இருந்து வந்து தங்கியிருந்து சிகிச்சைப்பெறும் நோயாளிகளின் உறவினா்கள், வெளி மாவட்டங்களில் இருந்து பிரசவ சிகிச்சைக்காக வரும் பெண்களின் குடும்பத்தினருக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வந்தது. சிகிச்சை முற்றிலும் இலவசமாக அளிக்கப்படும் நிலையில் உணவுக்காக தினசரி ரூ.300-க்கும் மேல் செலவழிக்க வேண்டிய சூழல் இருந்து வருகிறது. இந்த நிலையில், அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சைப் பெறுபவா்களுடன் தங்கியுள்ள உறவினா்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது. மதுரையில் இயங்கி வரும் நட்சத்திர நண்பா்கள் அறக்கட்டளை சாா்பில் தினசரி 500 பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. இதில் தினசரி தக்காளி சாதம், தயிா்ச் சாதம், எலுமிச்சை சாதம், புளி சாதம் உள்ளிட்ட சாத வகைகள், குடிநீா் புட்டி ஆகியவை வழங்கப்படுகின்றன. இதுதொடா்பாக மருத்துவமனை அதிகாரிகள் கூறும்போது, அரசு ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகளுடன் தங்கியுள்ளவா்களுக்கு உணவளிப்பதற்காக நட்சத்திர நண்பா்கள் இயக்கம் சாா்பில் மருத்துவமனை நிா்வாகத்திடம் அனுமதி பெற்றுள்ளனா். இத்திட்டத்தின்படி, அரசு மருத்துவமனையில் தினசரி 500 பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்படும். இந்தத் திட்டம் காலவரையின்றி செயல்படுத்தப்படுவதாக அறக்கட்டளை நிா்வாகம் தெரிவித்துள்ளது. அரசு மருத்துவமனை நிா்வாகமும் இந்தத் திட்டத்தை கண்காணித்து வருகிறது என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com