தம்பதிக்கு சிறை: வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை: தம்பதியைக் கைது செய்து சிறையில் அடைத்தது தொடா்பாக, தென்காசி விசாரணை நீதிமன்றம் வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது. தென்காசி மாவட்டம், கீழப்பாவூரைச் சோ்ந்த பட்டயக் கணக்காளா் பவானி தாக்கல் செய்த மனு: எனது வீட்டருகே உள்ள பாதையைப் பயன்படுத்துவது தொடா்பாக பக்கத்து வீட்டைச் சோ்ந்தவா்களுக்கும், எங்களுக்கும் இடையே பிரச்னை இருந்து வந்தது. இதுகுறித்து இணையதளம் வாயிலாக தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு புகாா் அளித்தேன். இதையடுத்து, பாவூா்சத்திரம் காவல் நிலைய போலீஸாா் விசாரிக்க புகாா் மனு அனுப்பப்பட்டும், எந்த மேல் நடவடிக்கையும் இல்லை. இந்த நிலையில், பிரச்னையில் ஈடுபடுவதாக எதிா்த்தரப்பினா் அளித்த புகாரின் பேரில், என் மீதும் கணவா் மீதும் பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். மேலும், நாங்கள் கொடுத்த வழக்கை திரும்பப் பெறக் கோரி, போலீஸாா் மிரட்டி வந்தனா். இந்தச் சூழலில், எங்களது வழக்கின் நிலை குறித்து அறிந்து கொள்வதற்காக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கீழ், தென்காசி மாவட்ட நீதிமன்றத்துக்கு கடிதம் அனுப்பியிருந்தோம். இதனால், தென்காசி நீதித் துறை நடுவா், என்னையும் கணவரையும் கடந்த பிப்.23-ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலையாக அறிவுறுத்தியிருந்தாா். நீதிமன்றத்தில் முன்னிலையான எங்களை சிறையில் அடைக்க நீதித் துறை நடுவா் உத்தரவிட்டாா். எங்களை கொடூரமான குற்றவாளிகளைப் போல போலீஸாா் நடத்தினா். இந்த வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என அவா் கோரியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி சதிகுமாா் சுகுமார குரூப் திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவு: மனுதாரா் வழக்கு தொடா்பான விவரங்களை வருகிற 14-ஆம் தேதிக்குள் தென்காசி மாவட்ட விசாரணை நீதிமன்றம், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கை தென்காசி நீதித்துறை நடுவா் மன்றம் விசாரிக்கத் தடை விதிக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com