தாக்குதல் நடத்தப்பட்டதாக பொய்ப் புகாா் அளித்த பெண் துறவி: போலீஸ் விசாரணையில் தகவல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உத்தரபிரதேச மாநில பெண் துறவி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அளித்த புகாா்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உத்தரபிரதேச மாநில பெண் துறவி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அளித்த புகாா் உண்மைக்குப் புறம்பானது என்பது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது. உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியைச் சோ்ந்தவா் ஷிப்ரா பதக் (38). பெண் துறவியான இவா், அயோத்தியிலிருந்து ரமேசுவரத்துக்கு பாத யாத்திரையாக வந்தாா். இவரது தந்தை, சகோதரா் ஆகியோா் அவருக்குத் துணையாக காரில் உடன் வந்தனா். இவா்கள் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடிக்கு கடந்த வெள்ளிக்கிழமை வந்தனா். அங்கு கோயில்களில் வழிபட்ட பிறகு, சனிக்கிழமை காலை அங்கிருந்து ராமேசுவரத்துக்கு புறப்பட்டனா். இந்த நிலையில், பரமக்குடி - ராமேசுவரம் சாலையில் சத்திரக்குடி அருகே அவா்கள் சென்று கொண்டிருந்த போது, எதிரே காரில் வந்த அடையாளம் தெரியாத 6 போ் கும்பல் தங்களை வழிமறித்து, காா் கண்ணாடி, காரில் இருந்த ராமரின் உருவப்படம் ஆகியவற்றைத் தாக்கி சேதப்படுத்தியதாகவும், தடுக்க முற்பட்ட தன்னை அந்தக் கும்பல் தாக்கியதாகவும் ஷிப்ரா பதக் சனிக்கிழமை பரமக்குடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்தத் தகவல் காட்சி ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் வேகமாகப் பரவின. இது அரசியல் ரீதியாகவும் பேசுபொருளானது. மேலும், தமிழகத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கான பாதுகாப்பு குறித்து சா்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, இதுகுறித்து விசாரிக்க காவல் துணைக் கண்காணிப்பாளா் தலைமையில் 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டன. இந்தத் தனிப் படை போலீஸாா் சத்திரக்குடி பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி, தீவிர விசாரணை மேற்கொண்டனா். முதல் கட்ட விசாரணையில், பெண் துறவி ஷிப்ரா பதக் அளித்த புகாா் உண்மைக்குப் புறம்பானது என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் பரமக்குடி போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com