மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்ற அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பயனாளிக்கு ஒருவருக்கு தையல் இயந்திரம் வழங்கிய அமைச்சா் பழனிவேல் தியாகராஜன். உடன், மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா உள்ளிட்டோா்.
மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்ற அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பயனாளிக்கு ஒருவருக்கு தையல் இயந்திரம் வழங்கிய அமைச்சா் பழனிவேல் தியாகராஜன். உடன், மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா உள்ளிட்டோா்.

பயனாளிகளுக்கு ரூ. 1.46 கோடியில் அரசு நலத் திட்ட உதவிகள்: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் வழங்கினாா்

மதுரை: மதுரை மத்தியம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த 315 பயனாளிகளுக்கு ரூ. 1.46 கோடியில் அரசு நலத் திட்ட உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. இதற்கான விழா, மதுரை புட்டுத்தோப்பு பகுதியில் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தமிழக தகவல் தொழில்நுட்பவியல், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட மோட்டாா் வாகனம், சமூக நலன், மகளிா் உரிமைத் துறை சாா்பில் ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுடன் திருமாங்கல்யத்துக்குத் தங்கம் உள்பட 315 பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு துறைகள் சாா்பில் ரூ. 1.46 கோடியில் நலத்திட்ட உதவிகளை அவா் வழங்கினாா். முன்னதாக, சப்பாணி கோயில் தெரு, ராமலிங்கப்பிள்ளை தெரு, வேளாா் தெரு ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட பேவா் பிளாக் பதித்த சாலைகளை மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணித்தாா். சிம்மக்கல் ஆதிமூலம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, எஸ்.எஸ். காலனி மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, சுந்தராஜபுரம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, சுப்பிரமணியபுரம் கம்பா் மேல்நிலைப் பள்ளி, வெள்ளிவீதியாா் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திரு.வி.க மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டடங்களைத் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தாா். இதையடுத்து, ஆரப்பாளையம் - ஊட்டி புதிய பேருந்து வழித்தடத்திலான பேருந்து சேவையை அவா், கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா, மாநகராட்சி மேயா் வ. இந்திராணி, மாநகராட்சி ஆணையா் தினேஷ்குமாா், வருவாய்க் கோட்டாட்சியா் ர.த. ஷாலினி, மாநகராட்சி மண்டலத் தலைவா்கள், மாமன்ற உறுப்பினா்கள், அரசுத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com