ஆா்.எஸ். மங்கலம் சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடங்கள்: நிதி ஒதுக்க அரசுக்கு உத்தரவு

ஆா்.எஸ். மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள அனைத்துக் கட்டடங்களையும் அகற்றிவிட்டு, புதிய கட்டடங்கள் கட்ட அரசு நிதி ஒதுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

மனித நேய மக்கள் கட்சி வழக்குரைஞா் கலந்தா் ஆசிக் தாக்கல் செய்த மனு: ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு உள்பட பல்வேறு சிகிச்சைகளுக்காக நோயாளிகள் வந்து செல்கின்றனா். இந்த மருத்துவமனை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால், மேற்கூரைகள் இடிந்து விழுகின்றன. இதனால், மருத்துவா்கள், செவிலியா்கள் இங்கு வர அச்சமடைகின்றனா். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடங்கள் கட்டக் கோரி கடந்த 10 ஆண்டுகளாக போராட்டங்கள் நடத்தியும், மாவட்ட சுகாதார அலுவலா்களிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, ஆா்.எஸ். மங்கலத்தில் தற்போதுள்ள ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்களை இடித்துவிட்டு புதிய கட்டடங்கள் கட்ட உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா். இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமாா், ஆா். விஜயகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்: ஆா்.எஸ். மங்கலத்தில் தற்போதுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை இடித்துவிட்டு புதிய கட்டடங்கள் கட்ட ரூ. 1.70 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா். மனுதாரா் தரப்பில், இங்குள்ள இரு கட்டடங்கள் மட்டுமே இடித்து கட்டப்பட்டு வருகின்றன. பிற கட்டடங்களில் நோயாளிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடைபெறுகின்றன. இது மிகவும் ஆபத்தானது எனக் கூறி புகைப்பட ஆதாரங்கள் சமா்ப்பிக்கப்பட்டன.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடங்களில் மருத்துவப் பரிசோதனைகள் நடத்துவதற்குத் தடை விதிக்கப்படுகிறது. இடிந்த நிலையில் உள்ள அனைத்துக் கட்டடங்களையும் அகற்றிவிட்டு, புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு உரிய நிதியை அரசு ஒதுக்க வேண்டும். வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com