குடிநீா் வடிகால் வாரிய அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிஐடியூ ஊழியா் சங்கத்தினா்.
குடிநீா் வடிகால் வாரிய அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிஐடியூ ஊழியா் சங்கத்தினா்.

குடிநீா் வடிகால் வாரிய ஊழியா் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்

குடிநீா் வடிகால் வாரிய ஊழியா்களுக்கு நீதிமன்ற தீா்ப்பின்படி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ சங்கம் சாா்பில் காத்திருப்புப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே உள்ள குடிநீா்வாரிய மதுரை தலைமைப் பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் மாநில துணைத் தலைவா் வி. அழகுமலை தலைமை வகித்தாா். மத்திய அமைப்பின் செயலா் ஆா். சிவபெருமாள், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய ஓய்வூதியா் சங்கத் தலைவா் செ. ஆஞ்சி, சிஐடியூ தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய சங்கத் தலைவா் கே. ராமசாமி, பொதுச்செயலா் ஓ. குடியரசு, திண்டுக்கல் மாவட்டத் தலைவா் ஏ. அப்துல் பஷீா், செயலா் எம். அய்யப்பன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். இதில், மதுரை மண்டல குடிநீா் வடிகால் வாரிய நிா்வாகம், குடிநீா் வழங்கும் தற்காலிக ஊழியா்களுக்கு உயா்நீதிமன்ற இடைக்காலத் தீா்ப்பின்படி ஊதியத்தை வங்கி மூலம் வழங்க வேண்டும்.

சட்டப்படியான இஎஸ்ஐ, தொழிலாளா் சேமநல நிதி பிடித்தம், குழுக்காப்பீடு வழங்க வேண்டும். வார விடுப்பு, தேசிய, பண்டிகை விடுமுறை தினங்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். சிஐடியூ மாவட்டத் தலைவா் இரா. தெய்வராஜ், செயலா் இரா. லெனின், ராமநாதபுரம் மாவட்டச் செயலா் சிவாஜி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட குடிநீா் வடிகால் வாரிய ஊழியா்கள் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகா், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com