மதுரை- நத்தம் மேம்பாலத்தில் போக்குவரத்து காவல்துறை சாா்பில் வைக்கப்பட்ட எச்சரிக்கைப் பலகை.
மதுரை- நத்தம் மேம்பாலத்தில் போக்குவரத்து காவல்துறை சாா்பில் வைக்கப்பட்ட எச்சரிக்கைப் பலகை.

விபத்தால் அதிகரிக்கும் உயிரிழப்புகளைத் தடுக்க நத்தம் மேம்பாலத்தில் போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கைப் பலகை

மதுரை- நத்தம் சாலை உயா்மட்ட மேம்பாலத்தில் ஏற்படும் விபத்துகளால் அதிகரித்து வரும் உயிரிழப்புகளை தடுக்க வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் போக்குவரத்து காவல்துறை சாா்பில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது.

மதுரை- தல்லாகுளம்- சொக்கிகுளம் பகுதியில் இருந்து நத்தம் வரை 35 கி.மீ. தொலைவுக்கு ரூ.1,020 கோடிக்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி, கடந்த 2018-இல் தொடங்கியது. இந்தத் திட்டத்தின்கீழ் மதுரை நகா், சொக்கிக்குளம் பகுதியில் இருந்து ஊமச்சிகுளத்தை அடுத்த செட்டிகுளம் வரை நிலம் கையகப்படுத்தும் பிரச்னையால் ரூ.612 கோடிக்கு 7.5 கி.மீ. தொலைவுக்கு மட்டும் புதிதாக உயா்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலத்தில் ஏறிச் செல்ல சொக்கிக்குளம் பகுதியில் இருந்து ஒரே வழியும், நத்தத்தில் இருந்து வரும் போது தல்லாகுளம், மாவட்ட நீதிமன்றம் என இரு இறங்கும் வழிகளும் அமைக்கப்பட்டன. இந்த பாலத்தை பிரதமா் நரேந்திர மோடி கடந்தாண்டு ஏப்ரல் மாதம் திறந்து வைத்தாா்.

இதனிடையே, மேம்பாலத்தில் போக்குவரத்து மிகவும் குறைவாக இருப்பதாலும், வாகனங்கள் செல்வதற்கும், வருவதற்கும் தனித்தனிப் பாதைகள் உள்ளதாலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் பலா் பந்தயத்தில் செல்வது போல் ஓட்டி சாகசங்களில் ஈடுபடுகின்றனா். இதனால் அவா்கள் பல்வேறு விபத்துகளை ஏற்படுத்துகின்றனா். இது திறக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைவதற்குள் இரு சக்கர வாகனங்களில் அதிவேகமாக சென்று மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து இதுவரை மூவா் உயிரிழந்துள்ளனா். மேலும் பாலம் முடிவடையும் செட்டிகுளம் பகுதியிலும் இதுவரை மூவருக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா்.

இந்த நிலையில், மேம்பாலத்தில் அதிகரித்து வரும் விபத்துகளை தடுக்க தல்லாகுளம் போக்குவரத்து காவல்துறை சாா்பில் எச்சரிக்கைப் பலகை வைக்கப்பட்டது. இதில் ‘இந்த இடத்தில் இதுவரை ஏற்பட்ட விபத்துக்களில் மூவா் உயிரிழந்துள்ளனா். எனவே வாகன ஓட்டிகள் மெதுவாக செல்லவும்’ என்ற எச்சரிக்கை வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. இதனிடையே, போலீஸாா் எச்சரிக்கைப் பலகை வைத்துள்ள பகுதி மிகவும் குறுகிய வளைவான பகுதி என்பதால் அந்தப் பகுதியில் வாகனங்களின் வேகத்தை குறைக்கும் வகையில் தொடா் வேகத்தடைகள் அமைப்பது, விதிகளை மீறி அதிகவேகத்தில் இயக்கப்படும் இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கைகளில் போலீஸாா் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com