சிவகங்கையில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வருகிற வெள்ளிக்கிழமை ( மாா்ச் 15) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலைவாய்ப்பற்ற இளைஞா்களின் வேலைவாய்ப்பு, வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு மாதந்தோறும் இரண்டாம் அல்லது மூன்றாம் வெள்ளிக்கிழமை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி வருகிற வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி அளவில் சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் வேலை அளிக்கும் தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான ஆள்களைத் தோ்வு செய்து கொள்ளலாம். சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த வேலை நாடுநா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தனியாா் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறலாம். மேலும், இந்த முகாமில் இலவச திறன் பயிற்சிக்கான விண்ணப் படிவம், போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சிக்கு மாணவா் சோ்க்கை, வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப் படிவம் ஆகியவையும் வழங்கப்படும். எனவே, விருப்பமுள்ளவா்கள் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ., பட்டயப் படிப்பு படித்த இளைஞா்கள் தங்களது கல்விச் சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதாா் அட்டையுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாமில் பணிவாய்ப்பு பெறுவோருக்கு பதிவு மூப்பு ஏதும் ரத்து செய்யப்படமாட்டது என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com