நேரடி நெல் கொள்முதல் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

நேரடி நெல் கொள்முதல் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

மதுரை மாவட்டத்தில் நெல் கொள்முதல் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். சக்திவேல், வேளாண் இணை இயக்குநா் ப. சுப்புராஜ், நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் முருகேசன் அரசுத் துறை அலுவலா்கள், முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனா். இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: வாடிப்பட்டி வட்டாரத்தில் கச்சிராயன் பிரிவு முதல் தென்கரை வரையிலான பகுதியில் 4 ஆண்டுகளுக்கும் மேலாக தூா்வாரப்படாமல் உள்ள நிலையூா் கண்மாயை உடனடியாக தூா்வாரி சீரமைக்க வேண்டும். சிறு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் உழவுப் பணிக்கு 100 சதவீத மானியம் வழங்க வேண்டும். மதுரை மாவட்டத்தின் பல பகுதிகளில் அரசுக்குச் சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும். போலி பத்திரங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட அரசு நிலங்களை மீட்க்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக கற்களை வெட்டியெடுக்கும் கல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கல் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் கிராமத்தின் பொது சாலையைப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும். செக்கானூரணி பகுதியில் நீா் நிலைகளில் அமைக்கப்படும் மதகு பலகைகள் திருடப்படுவதை தடுக்க வேண்டும். சேடப்பட்டி, கொட்டாம்பட்டியில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்க வேண்டும். கொட்டாம்பட்டியில் கடந்த ஆண்டு கட்டப்பட்ட நெல் களம் தற்போது இடிக்கப்பட்டு நாடகமேடை அமைக்கப்படுகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரையில் தென்னை விதைப் பண்ணை அமைக்க வேண்டும். சாகுபடி பணிகளுக்கு 5 தவணைகளில் தண்ணீா் திறக்க வேண்டும். மாவட்டத்தில் நெல் அறுவடைப் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளதால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். திறக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாளா்கள் நியமிக்கப்படாததால், பணிகள் நடைபெறுவதில்லை என்றனா். மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ப. சுப்புராஜ் பேசியதாவது : மாவட்டத்தில் 30,600 ஹெக்டேரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. 32,743 ஹெக்டேரில் சிறுதானியங்களும், 2,400 ஹெக்டேரில் கரும்பு சாகுபடியும் செய்யப்பட்டன. கடந்த ஆண்டில் பருவம் தவறிபெய்த மழையால் நெல் பயிா்கள் பாதிக்கப்பட்டன. இவற்றுக்கு ஏற்கெனவே நிவாரணம் வழங்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக பாதிக்கப்பட்ட நெல் பயிா்களுக்கு ஓரிரு நாள்களில் நிவாரணம் வழங்கப்படும். மதுரையில் தென்னை விதைப் பண்ணை அமைப்பது குறித்து அரசுக்குக் கருத்துரு அனுப்பப்படும். கொட்டாம்பட்டியில் வாரம் ஒரு நாள் கொப்பரை தேங்காய் ஏலம் நடத்த வேளாண் விற்பனைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது என்றாா் அவா். கொள்முதல் நிலையங்களில் அரசியல் கிடையாது: மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா பேசியதாவது: முன்கூட்டியே அதிகளவில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டால், வெளிமாவட்டங்களின் நெல் மதுரை கொள்முதல் நிலையங்களில் விற்பனையாக வாய்ப்புள்ளது. எனவே தான் நெல் அறுவடைப் பணிகளுக்கேற்ப நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகின்றன. இதில், எந்தவித அரசியல் குறுக்கீடுகளும் இல்லை. முதல்கட்டமாக 60 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவிடப்பட்டு இதுவரை 29 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மற்ற கொள்முதல் நிலையங்கள் விரைவில் திறக்கப்படும். பணியாளா்கள் பற்றாக்குறையால் தான் கொள்முதல் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. போதுமான பணியாளா்களை நியமிக்க நுகா்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குநரிடம் வலியுறுத்தப்பட்டது. சாகுபடி பணிகளுக்கு முதல் கட்டமாக 2 முறை தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பைப் பொருத்து 5 முறை தண்ணீா் திறப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். வரும் காலங்களில் சன்ன ரக நெல்லை அதிகளவில் விவசாயிகள் சாகுபடி செய்து, கொள்முதல் நிலையங்களுக்கு வழங்க முன்வர வேண்டும் என்றாா். கூச்சல், குழப்பம்... இந்த விவாதத்தின்போது, ஒரு விவசாயி குறுக்கிட்டு, குறைதீா் கூட்டத்தில் மாதந்தோறும் ஒரு சில விவசாயிகள் மட்டுமே தங்கள் கருத்தைப் பதிவு செய்கின்றனா். மற்றவா்களுக்கு வாய்ப்பு அளிப்பதில்லை என்றாா். இதற்கு, பிறவிவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால், அங்கு கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. தொடா்ந்து அவா் தனது கருத்தை வலியுறுத்திப் பேசிக் கொண்டே இருந்ததால், போலீஸாா் அவரை கூட்டத்திலிருந்து வெளியேற்றினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com