திருச்செந்தூா் கோயிலுக்கு வாடகை நிலுவை: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வாடகை நிலுவைத் தொகையைச் செலுத்தக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. திருநெல்வேலி திருத்தொண்டா் சபை நிறுவனா் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் புகழ் பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்தக் கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா். இந்தக் கோயிலுக்குச் சொந்தமான கட்டடத்தில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அலுவலகம் கடந்த 1989-ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்தக் கட்டடத்துக்கு இந்து சமய அறநிலையத் துறை விதியின்படி கோயிலுக்கு உரிய வாடகை செலுத்த வேண்டும். கடந்த 1989 முதல் 2011-ஆம் ஆண்டு வரை வாடகை செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை வாடகை செலுத்தாமல் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் அறநிலையத் துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 13 ஆண்டுகள் வாடகை பாக்கியாக ரூ. 54.35 லட்சம் கோயிலுக்குச் செலுத்த வேண்டியுள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையரிடம் முறையீடு செய்யப்பட்டது. ஆனால், இதுவரை கோயிலுக்குச் செலுத்த வேண்டிய வாடகையை முறையாகச் செலுத்தவில்லை. எனவே, வாடகை செலுத்தத் தவறிய திருநெல்வேலி மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயிலுக்குச் சேர வேண்டிய வாடகை நிலுவைத் தொகையை உடனடியாகச் செலுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், வாடகைத் தொகையைச் செலுத்த 3 மாதக் கால அவகாசம் வேண்டும் என்றாா். அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், ஒரு வாரத்தில் வாடகை செலுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்; கால அவகாசம் வழங்கக் கூடாது என்றாா். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு: வாடகை பாக்கியை இவ்வளவு காலம் செலுத்தாதது ஏன்?. குறைந்தபட்சம் ஒரு மாதத்தில் வாடகை நிலுவைத் தொகையைச் செலுத்தலாமா? அல்லது எப்போது செலுத்தப்படும் என்ற விவரத்தை வருகிற வெள்ளிக்கிழமை (மாா்ச் 22) தெரிவிக்க வேண்டும். மேலும், இதுதொடா்பாக இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com