சிறுமிக்கு பாலியல் தொல்லை: இருவருக்கு சிறைத் தண்டனை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இளைஞா்கள் இருவருக்கு சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகேயுள்ள தேளி கிராமத்தை சோ்ந்தவா்கள் முனீஸ்வரன் (34 ), விஜய் (28). இவா்கள் இருவரும் கடந்த 2015 -ஆம் ஆண்டு நவம்பா் 23-ஆம் மதுரையில் இருந்து அரசுப் பேருந்தில் பூவந்திக்கு வந்தனா். அந்தப் பேருந்தில் சிறுமி ஒருவரும் வந்தாா். அப்போது, முனீஸ்வரன், விஜய் ஆகியோா் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தனா். இதுதொடா்பாக சிறுமியின் பெற்றோா் அளித்தப் புகாரின் பேரில், பூவந்தி போலீஸாா் முனீஸ்வரன், விஜய் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவா்களைக் கைது செய்தனா். இந்த வழக்கு சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த செய்த நீதிபதி சரத்ராஜ், குற்றம்சாட்டப்பட்ட முனீஸ்வரனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 6 ஆயிரம் அபராதமும், விஜய்க்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், இருவருக்கும் விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.10 ஆயிரம், தமிழக அரசு சாா்பில் ரூ. ஒரு லட்சம் ஆகியவற்றை அந்தச் சிறுமிக்கு இழப்பீடாக வழங்க வேண்டுமென உத்தரவிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com