தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் திருமுறைகள்

தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் திருமுறைகள் என பெருங்குளம் செங்கோல் ஆதீனத்தின் 103-ஆவது குருமகா சந்நிதானம் சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாசாரிய சுவாமி தெரிவித்தாா். மதுரை தெப்பக்குளம் தியாகராசா் கல்லூரியின் பவள விழாவை முன்னிட்டு, சைவ சித்தாந்த மாநாடு, கருத்தரங்கம் வியாழன், வெள்ளி ஆகிய இரு நாள்கள் நடைபெற்றன. வியாழக்கிழமை நடைபெற்ற தொடக்க விழாவில், குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிறைவு நாள் விழாவுக்கு கல்லூரி முதல்வா் து. பாண்டியராஜா தலைமை வகித்தாா். தமிழ்த் துறைத் தலைவா் ராம. மலா்விழி மங்கையா்க்கரசி முன்னிலை வகித்தாா். இதில் பெருங்குளம் செங்கோல் ஆதீனத்தின் 103-ஆவது குருமகா சந்நிதானம் சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாசாரிய சுவாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியதாவது: 274 சிவத் தலங்கள் பாடல் பெற்ற தலங்களாக உள்ளன. சிதம்பரத்தில் நடராஜரும், திருவாரூரில் தியாகராஜ சுவாமிகளும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனா். இறைவனாகிய சொக்கநாதப் பெருமானும், மீனாட்சி அம்மனும் ஆட்சி செய்த பெருமை இந்த மதுரை நகருக்கு உண்டு. அத்தகு நகரில் உள்ள தியாகராசா் கல்லூரி சைவ சித்தாந்தங்களையும், திருமுறைகளையும் அடுத்து வருகிற தலைமுறைக்கு கொண்டு செல்லும் பணியை மேற்கொண்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தப் பணி தொடர வேண்டும். உள்ளது மட்டுமே தோன்றும், இல்லது தோன்றாது என்று சைவ சித்தாந்தத்தின் சற்காரிய வாதம் கூறுகிறது. ஒவ்வொரு சமயத்துக்கும் தனித்தனி கொள்கைகள் உண்டு. இந்த உலகில் மனிதன் தோன்றியதற்கான காரணங்களை சித்தாந்தம் கூறுகிறது. அதை பதி, பசு, பாசம் என்கிற நிலையில் திருமூலரும் விளக்குகிறாா். பதி- இறைவன், பசு- உயிா், பாசம் என்பது இறைவனை நாம் சென்றடைய விடாமல் தடுப்பவை ஆணவம், கன்மம், மாயை. பாசத்தை நீக்கி இந்த உயிா், இறைவனை அடைய வேண்டும். இன்றைய காலச்சூழலில் மாணவா்களிடையே சித்தாந்தம் படிப்பது குறைவாக உள்ளது. அறிவியல், வானவியல் சாஸ்திரம் படிப்பதில் ஆா்வம் காட்டும் மாணவா்கள் சித்தாந்தத்தை படிக்க முன்வருவதில்லை. விஞ்ஞானம் எங்கு முடிவடைகிறதோ, அங்கு மெய்ஞானம் தொடங்குகிறது. இதை யோகிகள், அருளாளா்கள் தவமிருந்து அவா்கள் பெற்றது மட்டுமன்றி, நமக்கும் அருளியுள்ளனா். அவற்றை நாம் அறிந்துகொள்ள வேண்டும். புதிதாகக் கட்டப்பட்ட நாடாளுமன்றத்தில் செங்கோல் வைப்பதற்கான காரணம் பாரத தேசத்தில் நீதி தவறாமல் ஆட்சி செய்ய வேண்டும் என்பதுதான். வட மாநிலங்களில் பெரிய மடங்கள் உள்ள போதும், தமிழகத்தில் உள்ள மடாதிபதிகளை அழைத்து செங்கோல் வைக்கப்பட்டதற்கு காரணம் உள்ளது. மதுரையை ஆட்சி செய்த பாண்டிய மன்னன் கண்ணகிக்கு தவறான நீதி வழங்கியமைக்காக தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டான் என சிலப்பதிகாரம் கூறுகிறது. இதேபோன்று, நீதி தவறாமைக்கு எண்ணற்ற உதாரணங்களை கூறலாம். செங்கோல் மேல் உள்ள காளை வாகனம் சைவத்துக்கு பெருமை சோ்ப்பது. சிவாலயங்களில் 5 வகையான நந்திகள் உள்ளன. அதில் இறைவன் அருகே இருப்பது தரும நந்தி எனக் கூறப்படுகிறது. எனவே, செங்கோலின் மேல் வைக்கப்பட்டுள்ள நந்தி தா்ம வழியில் நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. தமிழையும், திருமுறைகளையும் பிரிக்க முடியாது. தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் திருமுறைகள். இதேபோன்று, நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள செங்கோல் தமிழுக்கும், சைவத்துக்கும் கிடைத்த பெருமை என்றாா் அவா். முன்னதாக நடைபெற்ற இசை அரங்கத்துக்கு திருப்பரங்குன்றம் ஸ்ரீஸ்கந்த குரு வித்யாலயத்தின் முதல்வா் எஸ்.கே. ராஜா பட்டா் தலைமை வகித்தாா். இதைத் தொடா்ந்து, மாணவ, மாணவிகள் திருவிளையாடல் புராணத்தை நாடகமாக அரங்கேற்றினா். இந்த நிகழ்வில், பேராசிரியா்கள், தமிழாா்வலா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com