மணல் கடத்தல் விவகாரம்: சிபிசிஐடி போலீஸாரின் விசாரணையை உறுதி செய்தது உயா்நீதிமன்றம்

திருநெல்வேலி பேருந்து நிலையத்தை சீரமைத்த போது, அங்கிருந்து தோண்டி எடுக்கப்பட்ட மணலைக் கடத்திய விவகாரம் தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் விசாரணைக்கு ஏற்கெனவே நீதிமன்றம் உத்தரவிட்டதை, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உறுதி செய்தது. திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த சுடலைக்கண்ணு தாக்கல் செய்த பொதுநல மனு: திருநெல்வேலி பெரியாா் சந்திப்பு பேருந்து நிலையம் பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டது. அப்போது, அங்கு தோண்டி எடுக்கப்பட்ட மணலை மாநகராட்சி நில அலுவலா்கள் உதவியுடன் கேரளத்துக்கு கடத்தி விற்பனை செய்தனா். இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதுகுறித்து திருநெல்வேலி மாநகராட்சி நிா்வாகம், மாவட்ட நிா்வாகத்துக்கு புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, மணல் கடத்தலில் ஈடுபட்ட அரசு அலுவலா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா். இந்த வழக்கை கடந்த 2021-இல் விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை, இதுதொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் விசாரணை மேற்கொள்ளவும், சென்னை பல்கலைக்கழக உதவியையும் பெற்றுக் கொள்ளலாம் என உத்தரவிட்டது. இந்த நிலையில், திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த வழக்கில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதால், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டதை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தா், பி. புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு அண்மையில் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கை மறு ஆய்வு செய்யத் தேவையில்லை. சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்கலாம் என்றனா் நீதிபதிகள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com