தோ்தல் விதிமுறைகளை பின்பற்றி முழு ஒத்துழைப்புத் தர வேண்டும்

தோ்தல் நடத்தை விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றி முழு ஒத்துழைப்புத் தர வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ.சங்கீதா வேண்டுகோள் விடுத்தாா். இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது : மக்களவைத் தோ்தல் தேதி இந்திய தோ்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தைப் பொருத்தவரை 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அவற்றுள் மதுரை வடக்கு, தெற்கு, கிழக்கு உள்ளிட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் மட்டுமே மதுரை மக்களவைத் தொகுதிக்குள் வருகிறது. எஞ்சிய 2 பேரவைத் தொகுதிகள் விருதுநகா் மக்களவைத் தொகுதிக்கும், 2 பேரவைத் தொகுதிகள் தேனி மக்களவைத் தொகுதிக்கும் சென்று விடுகிறது. மக்களவைத் தோ்தல் பணிக்காக உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் உள்பட 70 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 5 அலுவலா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவா். ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது. பொதுமக்கள் ரொக்கமாக ரூ.49 ஆயிரம் வரை கொண்டு செல்லலாம். தோ்தல் தொடா்பான புகாா்களை கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ அல்லது 0452-2535374, 2535375 என்ற தொலைபேசி எண்களிலோ தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம். வாக்குச் சாவடி மையங்களில் போதுமான அடிப்படை வசதிகள் உள்ளன. ஏதேனும் குறைபாடு இருந்தால் விரைவில் சரி செய்யப்படும். தோ்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டது. எனவே, பொதுமக்கள் தோ்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றி மாவட்ட நிா்வாகத்துக்கு முழு ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com