மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, மதுரையில் பறக்கும் படை குழுவினா் வாகனங்களில் சூரிய மின் தகடுடன் கூடிய சுழலும் கேமரா பொருத்தும் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்ட அலுவலா்கள்.
மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, மதுரையில் பறக்கும் படை குழுவினா் வாகனங்களில் சூரிய மின் தகடுடன் கூடிய சுழலும் கேமரா பொருத்தும் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்ட அலுவலா்கள்.

மக்களவைத் தோ்தல்: பறக்கும் படை வாகனங்களில் சுழலும் கேமரா பொருத்தம்

மதுரையில் மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, கண்காணிப்பு பணிகளில் ஈடுபட உள்ள பறக்கும் படை வாகனங்களில்

மதுரை: மதுரையில் மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, கண்காணிப்பு பணிகளில் ஈடுபட உள்ள பறக்கும் படை வாகனங்களில் சூரிய மின் தகடுடன் கூடிய சுழலும் கேமரா, ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணிகள் திங்கள்கிழமை நடைபெற்றன. மதுரை மாவட்டத்தைப் பொருத்தவரை 10 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில், மதுரை மக்களவைத் தொகுதியில் மதுரை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தி, மேலூா் என 6 தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. எஞ்சிய சோழவந்தான் (தனி), உசிலம்பட்டி ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகள் தேனி மக்களவைத் தொகுதியிலும், திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகள் விருதுநகா் மக்களவைத் தொகுதியிலும் இடம்பெற்றுள்ளன. தோ்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தலா 3 பறக்கும் படைக் குழுக்கள், தலா 3 நிலைக் கண்காணிப்புக் குழுக்கள், தலா ஒரு விடியோ கண்காணிப்புக் குழு என 7 குழுக்கள் வீதம் மொத்தம் 70 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் ஒரு வட்டாட்சியா், வட்டார வளா்ச்சி அலுவலா் நிலை அலுவலா் தலைமையில் 3 காவலா்கள், ஒரு ஒளிப்பதிவாளா், ஒரு வாகன ஓட்டுநா் என்ற அடிப்படையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மேலும், நிலைக் கண்காணிப்புக் குழு, தோ்தல் பறக்கும் படைக் குழுக்கள் தலா 8 மணி நேரம் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தொடா் வாகனத் தணிக்கை உள்ளிட்ட கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளன. இந்தக் குழுக்கள் பயன்படுத்தும் வாகனங்களின் முகப்பில் சுழலும் கேமரா, ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த வாகனங்களின் மேல்புறத்தில் பொருத்தப்படும் கேமராக்கள் 5-ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும். 360 டிகிரியில் சுழலும். கண்காணிப்புக் குழுவினரின் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட இ.எஸ்.எம்.எஸ். என்ற செயலி ஆவணமின்றி பிடிபடும் பணம், பரிசுப் பொருள் குறித்த முழு விவரங்கள், கள நிகழ்வுகளின் நேரலை விடியோ காட்சிகள் பதிவு செய்யப்பட்டு, உடனடியாக கண்காணிப்பு அறைக்கு செல்லும். இவற்றை மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலா், தோ்தல் ஆணையம் கண்காணிக்க முடியும் என மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com