மதுரை வழியாக இரு புதிய ரயில்கள் இயக்கம்

தற்போது தெற்கு ரயில்வே பரிந்துரைக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியது.

மதுரை: தூத்துக்குடியில் இருந்து மதுரை வழியாக மேட்டுப்பாளையத்துக்கும், ராமேசுவரத்தில் இருந்து மதுரை வழியாக மங்களூருக்கும் இரு புதிய ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே பதிலளித்ததாக மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மதுரையில் கடந்த பிப்ரவரி 29-ஆம் தேதி தெற்கு ரயில்வேக்கு உள்பட்ட மக்களவை உறுப்பினா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தூத்துக்குடியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு மதுரை வழியாக ரயில் இயக்குவதற்கும் , ராமேசுவரத்திலிருந்து மங்களூருக்கு மதுரை வழியாக ரயில் இயக்குவதற்கும் தெற்கு ரயில்வே பரிந்துரை செய்து ரயில்வே வாரியத்துக்கு அனுப்பி வைத்ததாக எனது கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டது.

இந்த ரயில்களை இயக்க வேண்டும் என கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் தொடா்ந்து வலியுறுத்தி வந்தேன். அதன் விளைவாக தற்போது தெற்கு ரயில்வே பரிந்துரைக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியது. இதன்படி ஒரு இரவு நேர ரயில் தூத்துக்குடியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கும் , மேட்டுப்பாளையத்தில் இருந்து தூத்துக்குடிக்கும் வாரம் இரு முறை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இதேபோல, ராமேசுவரம்-மங்களூரு இடையே வாரம் ஒரு முறை ரயில் இயக்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த இரு ரயில்களையும் தினசரி ரயில்களாக இயக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com