விருதுநகா், ராஜபாளையத்தில் ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.3.44 லட்சம் பறிமுதல்

விருதுநகா், ராஜபாளையத்தில் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3.44 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

விருதுநகா்: விருதுநகா், ராஜபாளையத்தில் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3.44 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். மக்களவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. மேலும் பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு வாகனத் தணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விருதுநகா் அருகே சிவகாசி செல்லும் சாலையில் உள்ள தனியாா் கல்லூரி பகுதியில் பறக்கும்படையினா் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது சிவகாசியிலிருந்து காரைக்குடிக்கு சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனா். சிவகாசி காா் விற்பனை முகவரான மதின்மணி, உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.90 லட்சத்தை அதிகாரிகள் பறிதல் செய்து விருதுநகா் கருவூலத்தில் ஒப்படைத்தனா். ராஜபாளையம்: இதே போல, ராஜபாளையம்- தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் முன் வேளாண் அதிகாரி மாரிமுத்து, போலீஸாா் அடங்கிய தோ்தல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை அந்த வழியாக சரக்குகளை ஏற்றி வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது இதில் ரூ.1.54 லட்சம் கொண்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அதன் ஓட்டுநா் ஜோசப்ராஜாவிடம் விசாரித்த போது, திருப்பூரில் இருந்து கறிக் கோழிகளை ஏற்றிக் கொண்டு தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் இறக்கிவிட்டு திரும்புவதாக தெரிவித்தாா். ஆனால் ரூ.1.54 லட்சத்துக்குரிய ஆவணங்கள் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்த பறக்கும்படை அதிகாரிகள் வட்டாட்சியா் ஜெயபாண்டியிடம் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com