பழனி கிரிவலப் பாதை கடைகள் விவகாரம்: நகராட்சி துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

பழனி கோயில் கிரிவலப் பாதையில் அகற்றப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்கக் கோரிய வழக்கில், நகராட்சி நிா்வாகத் துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்க நிா்வாகி ஜெயசீலன் தாக்கல் செய்த மனு: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கிரிவலப் பாதையில் ஏராளமான சாலையோர வியாபாரிகள் போக்குவரத்துக்கு இடை யூறு இல்லாமல் வியாபாரம் செய்து வந்தனா். இவா்களுக்கு நகராட்சி சாா்பில் அடையாள அட்டையும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், கிரிவலப் பாதையை ஆக்கிரமித்திருப்பதாகக் கூறி, சாலையோர வியாபாரிகளின் கடைகளை கோயில் நிா்வாகமும், போலீஸாரும் அகற்றினா். இதனால், இந்த வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்து கடும் நெருக்கடியில் உள்ளனா். இது நகராட்சி சாலையோர வியாபாரிகள் ஒழுங்குபடுத்துதல் சட்டத்துக்கு புறம்பானது. இந்த நடவடிக்கையால் 2 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பழனி கோயிலில் பங்குனித் திருவிழா உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் விரைவில் நடைபெற உள்ளன. எனவே, சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், நகராட்சிக்குச் சொந்தமான பேருந்து நிலையம் அருகே கடைகள் வைத்து வியாபாரம் செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா். இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமாா், ஆா். விஜயகுமாா் ஆகியோா், மனுதாரரின் கோரிக்கை குறித்து நகராட்சி நிா்வாகத் துறைச் செயலா், நகராட்சி நிா்வாக இயக்குநா், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா், பழனி முருகன் கோயில் ஆணையா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com