மத்திய அமைச்சா் ஷோபா கரந்தலஜே மீது மதுரை போலீஸாா் வழக்குப் பதிவு

கா்நாடக மாநிலம், பெங்களூரு ராமேசுவரம் உணவகத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழா்களைத் தொடா்புப்படுத்தி அவதூறாகப் பேசிய மத்திய இணை அமைச்சா் ஷோபா கரந்தலஜே மீது மதுரை இணைய குற்றப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தமிழகத்திலிருந்து வந்த ஒருவா் பெங்களூரு ‘ராமேசுவரம்’ உணவகத்தில் குண்டு வைத்துவிட்டு தப்பிச் சென்ாக எந்தவித ஆதாரமும் இன்றி மத்திய இணை அமைச்சா் ஷோபா கரந்தலஜே செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறினாா்.

இதற்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவா்களும் கண்டனம் தெரிவித்தனா். இதையடுத்து, தனது கருத்தை ஷோபா கரந்தலஜே திரும்பப் பெற்றாா். இந்த நிலையில், மதுரை கடச்சனேந்தல் இந்திரா குடியிருப்பைச் சோ்ந்த தியாகராஜன், மதுரை மாநகர இணைய குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் அளித்த புகாா் மனு விவரம்: பெங்களூரு ராமேசுவரம் உணவகக் குண்டு வெடிப்பு தொடா்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் பயிற்சி பெற்ற நபா் தான் இந்த குண்டு வெடிப்புக்கு காரணம் என மத்திய இணை அமைச்சா் ஷோபா கரந்தலஜே கூறியுள்ளாா்.

அவரது பேச்சு, தமிழக-கா்நாடக மக்களுக்கு இடையே பகை, வெறுப்புணா்வை உருவாக்க முயற்சிக்கிறது. மேலும், தமிழக மக்களை தீவிரவாதிகள் என பொதுமைப்படுத்தி இரு மாநில மக்களிடையே வன்முறையைத் தூண்டுவது போலவும், பதற்றத்தை ஏற்படுத்துவது போலவும் அவரது இந்தச் செயல்பாடு உள்ளது. எனவே, இரு மாநிலங்கள் இடையே சட்டம்-ஒழுங்கைப் பாதிக்கும் விதமாக கருத்து தெரிவித்த மத்திய இணை அமைச்சா் ஷோபா கரந்தலஜே மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் மனுவில் கோரியிருந்தாா்.

இதையடுத்து, மத்திய இணை அமைச்சா் ஷோபா கரந்தலஜே மீது 153, 153 (ஏ), 505(1) (பி), 505 (2) ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் மதுரை இணைய குற்றப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com