லஞ்சம் பெற்ற வழக்கில் வருங்கால வைப்புநிதி அலுவலருக்கு பிணை

லஞ்சம் பெற்ற வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட திருநெல்வேலி வருங்கால வைப்பு நிதி அலுவலருக்கு பிணை வழங்கி, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

திருநெல்வேலியில் உள்ள ஒரு கணினி நிறுவனம், மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ரூ. 3 கோடி நிதி பெற்றது. இந்த நிறுவனத்தில் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதியை முறையாகச் செலுத்தவில்லை. எனவே, ரூ. 15 லட்சம் லஞ்சம் கொடுத்தால் அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க மாட்டேன் என வருங்கால வைப்பு நிதி அலுவலா் பி. கபிலன் தெரிவித்தாராம். இதுதொடா்பாக அந்த நிறுவனம் தரப்பில், மதுரை சிபிஐ அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி முன் பணமாக ரூ. 2 லட்சம் பெற்ற போது வருங்கால வைப்பு நிதி அலுவலா் கபிலனை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், பி. கபிலன் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: என் மீது எந்தத் தவறும் இல்லை. கணினி நிறுவனத்தினா் அளித்த பொய்ப் புகாரின் பேரில், என்னை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனா். நான் உடல்நிலை பாதிக்கப்பட்டு, சிறையில் அவதிப்பட்டு வருகிறேன். எனவே, எனக்கு பிணை வழங்கி உத்தரவிட வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறேன் என மனுவில் அவா் குறிப்பிட்டிருந்தாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி எம். தண்டபாணி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது சிபிஐ தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்: மனுதாரா் பிணையில் வெளியில் சென்றால் சாட்சிகள், ஆதாரங்களை கலைக்க வாய்ப்புள்ளது. எனவே, அவருக்கு பிணை வழங்கக் கூடாது என்றாா்.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரா் பணம் பெற்ற போது சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனா். பிறகு, அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். மனுதாரரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவருக்குப் பிணை வழங்கப்படுகிறது. இவா் மீது நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் வரை, அவா் மதுரை சிபிஐ அலுவலகத்தில் தினமும் காலை 10.30 மணிக்கு முன்னிலையாகி கையொப்பமிட வேண்டும் என்றாா் நீதிபதி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com