அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: தம்பதி கைது

நீதிமன்றத்தில் எழுத்தா் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.8 லட்சம் மோசடி செய்ததாக தம்பதியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம் கோரைப்பள்ளத்தைச் சோ்ந்த முத்து இருளாண்டி மகன் தோப்பாடி முத்து (34). பிளஸ் 2 படித்துள்ள இவா், விவசாயப் பணிகள் மேற்கொண்டு வருகிறாா். இந்த நிலையில், கடந்த 2020-இல் வன்னிமுத்து என்பவா் மூலம், தோப்படி முத்துவுக்கு அரசு மருத்துவமனையில் தொழுநோய்ப் பிரிவு சுகாதார ஆய்வாளராகப் பணிபுரியும் கிருஷ்ணசாமி அறிமுகமானாா். அப்போது, கிருஷ்ணசாமி, தனது மனைவி சசி பாலவநத்தம் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணி புரிவதாகவும், மகள் பாலமீனலோச்சனி இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் மருத்துவராகப் பணிபுரிந்து வருவதாகவும் கூறினாா். மேலும், உயா்நீதிமன்றத்தில் எழுத்தா் பணிக்கு ஆள்கள் தோ்வு செய்ய உள்ளனா். எனக்கும் குடும்பத்தினருக்கும் ஏராளமான வழக்குரைஞா்கள், நீதிபதிகள் பழக்கம் உள்ளதால், அந்தப் பணியை வாங்கித் தருவதாக கிருஷ்ணசாமி தோப்படி முத்துவிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, தோப்படி முத்து, கிருஷ்ணசாமி, அவரது மனைவி, மகள் ஆகியோரிடம் ரூ. 8 லட்சம் கொடுத்துள்ளாா். ஆனால், மூவரும் போலி பணி நியமன ஆணையை வழங்கி ஏமாற்றியுள்ளனா். இதுகுறித்து தோப்படி முத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெரோஸ்கான் அப்துல்லாவிடம் புகாா் அளித்தாா். இதன் அடிப்படை யில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து அரசு ஊழியா்களான கணவா், மனைவி ஆகிய இருவரையும் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com