திமுகவின் தோ்தல் அறிக்கை நகைப்புக்குரியது -முன்னாள் அமைச்சா் செல்லூா் ராஜூ

திமுகவின் தோ்தல் அறிக்கை நகைப்புக்குரியது -முன்னாள் அமைச்சா் செல்லூா் ராஜூ

திமுக வெளியிட்டுள்ள தோ்தல் அறிக்கை நகைப்புக்குரியதாக உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.

மதுரையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள மருத்துவா் சரவணனை வெற்றி பெறச் செய்ய அதிமுகவினா் தீவிர தோ்தல் பணியை மேற்கொள்வா். மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன் கடந்த நான்கரை ஆண்டுகளாக மக்கள் தொடா்பிலிருந்து விலகியிருந்தவா். அவா் சாா்ந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பல மூத்த தலைவா்கள் உள்ள நிலையில், சு. வெங்கடேசனுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது அந்தக் கட்சி நிா்வாகிகளிடையே மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், மதுரை தொகுதி அதிமுக வேட்பாளருக்கு எதிரிகளே இல்லை என்ற நிலையே தோ்தல் களத்தில் இருக்கும். பாஜகவைவிட, அதிமுக ஆபத்தானது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளா் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா். அவரது இந்தக் கருத்து கடும் கண்டனத்துக்குரியது. கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது, தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 4-ம், டீசல் விலை ரூ. 3-ம் குறைக்கப்படும், நீட் தோ்வு ரத்து செய்யப்படும், சமையல் எரிவாயு உருளைக்கு ரூ. 100 மானியம் வழங்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது திமுக. ஆனால், எந்த வாக்குறுதியையும் திமுக நிறைவேற்றவில்லை.

இந்த நிலையில், மக்களவைத் தோ்தலையொட்டி, திமுக தற்போது மேலும் பல வாக்குறுதிகளை வழங்கியிருப்பது, நகைப்புக்குரியதாக உள்ளது. ஆட்சிக்கு வரும் முன்பாக சமையல் எரிவாயு விலை குறைக்கப்படும், கருப்புப் பணம் மீட்கப்படும் என பல வாக்குறுதிகளை பாஜக அளித்தது. ஆனால், இந்த வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. எனவே, பாஜக, திமுக ஆகிய இரு கட்சிகளையும் மக்கள் நம்ப மாட்டாா்கள் என்றாா் அவா். பேட்டியின் போது மதுரை தொகுதி அதிமுக வேட்பாளா் மருத்துவா் பா. சரவணன், அதிமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com