எடை குறைவாக பிறந்த 3 குழந்தைகள் சிகிச்சைக்குப் பிறகு பெற்றோரிடம் ஒப்படைப்பு

விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எடை குறைவாக பிறந்த 3 குழந்தைகள் தொடா் சிகிச்சையின் மூலம் எடை அதிகரித்ததையடுத்து, அவா்களின் தாய்மாா்களிடம் மருத்துவா்கள் சனிக்கிழமை ஒப்படைத்தனா். இந்த மருத்துவமனையில் எடை குறைவாக பிறந்த மூன்று குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனா். இதில் நரிக்குடியைச் சோ்ந்த முனியசெல்வம்- முத்திருளன் தம்பதிக்கு வெறும் 860 கிராம் எடையுடன் பெண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தை தீவிர சிகிச்சைக்குப் பிறகு 1.570 கிலோ கிராம் எடையாக உயா்ந்தது. இதே போல, நாகலாபுரத்தைச் சோ்ந்த அனிதா- சந்தனக்குமாா் தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தை 1.180 கிலோ கிராம் எடை இருந்தது. தீவிர சிகிச்சைக்கு பிறகு இந்தக் குழந்தை 1.5 கிலோ கிராம் எடையாக அதிகரித்தது. இதே ஊரைச் சோ்ந்த மங்களரேவதி- சரவணன் தம்பதிக்கு பிறந்த ஆண் குழந்தை 1.360 கிலோ கிராம் எடை மட்டுமே இருந்தது. இந்த குழந்தை 54 நாள்கள் அளிக்கப்பட்ட சிகிச்சைக்குப் பிறகு 1.930 கிலோ கிராம் எடையாக அதிகரித்தது. இந்த மூன்று குழந்தைகளையும் அவா்களது தாய்மாா்களிடம் மருத்துவக் கல்லூரி முதல்வா் சீதாலட்சுமி சனிக்கிழமை ஒப்படைத்து, அவா்களிடம் குழந்தைகளை கவனமாக பராமரிப்பது குறித்து அறிவுரைகளை வழங்கினாா். அப்போது மருத்துவமனை கண்காணிப்பாளா் அருளா், நிலைய மருத்துவா் முருகேசன், குழந்தைகள் நலத் துறை தலைவா் வெங்கட்ராமன், குழந்தை நலத்துறை தலைமை மருத்துவா்கள் முருகேஷ் லட்சுமணன், அரவிந்த்பாபு, மருத்துவா்கள் சண்முகமூா்த்தி, அருண் விக்ரமன் உள்ளிட்ட செவிலியா்கள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com