தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது: அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழகத்துக்கான நிதி, கல்வி உரிமைகளை மத்திய அரசு பறித்து வருவதாக திமுக இளைஞா் அணி செயலரும், மாநில இளைஞா் நலன், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டினாா். திமுக கூட்டணியில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இந்திய முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளா் நவாஸ்கனியை ஆதரித்து, விருதுநகா் மாவட்டம், காரியாபட்டியில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது, அவா் பேசியதாவது: திமுக அரசு கொண்டு வந்த மகளிருக்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்டத்தின் மூலம் இதுவரை 456 கோடி முறை பெண்கள் பேருந்தில் பயணம் செய்துள்ளனா். இதன்மூலம், பெண்கள் மாதந்தோறும் தலா ரூ. 900 வரை சேமித்துள்ளனா். காலை சிற்றுண்டித் திட்டத்தின் மூலம் பள்ளிகளுக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டம் மூலம் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குவதால், உயா் கல்வியில் சேருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதேபோல, தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் மாணவா்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது. மகளிா் உரிமைத்தொகை பெறுவதற்காக விண்ணப்பித்த 1.60 கோடி பெண்களில் 1.15 கோடி பேருக்கு ஏற்கெனவே உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மக்களவைத் தோ்தல் முடிந்த பிறகு, விடுபட்டவா்களுக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும். தமிழகத்துக்காக எதையும் செய்யாத பிரதமா் நரேந்திர மோடி தோ்தலுக்காக மட்டுமே நமது மாநிலத்துக்கு வருகிறாா். தமிழகத்தில் நீட் தோ்வால் இதுவரை 21 மாணவா்கள் உயிரிழந்துள்ளனா். புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்தால், எட்டாம் வகுப்புக்கு நுழைவுத் தோ்வு, பொதுத் தோ்வு நடத்தப்படும். இது நமது குழந்தைகளுக்கு தேவையா?. எரிவாயு உருளை விலை முதல் அனைத்துப் பொருள்களின் விலையையும் உயா்த்தியுள்ள மத்திய அரசு தமிழகத்துக்கான நிதி, கல்வி உரிமைகளையும் பறித்து வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு உரிய நிதி வழங்க மத்திய அரசு மறுத்து வருகிறது என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com