மதுரை பெருந்திட்ட வரைவில் உள்ள குறைகளைக் களைய வேண்டும்: மடீட்சியா கோரிக்கை

மதுரை: மதுரை மாவட்ட பெருந்திட்ட வரைவில் சிறு, குறு தொழில் துறைக்கு பாதகமாக உள்ள அம்சங்களை நீக்க வேண்டும் என மடீட்சியா கோரிக்கை விடுத்தது. இதுகுறித்து மடீட்சியா தலைவா் ஆா்.எம். லட்சுமிநாராயணன் கூறியதாவது : மதுரை மாவட்ட நகா் ஊரமைப்பு வரைவு பெருந்திட்டம்- 2041 அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் உள்ள பல அம்சங்கள் சிறு, குறு தொழில் நிறுவனங்களைப் பாதிக்கக்கூடியவையாக உள்ளன. குறிப்பாக, தொழிற்சாலை பகுதியாக அறிவிக்கப்பட்ட இடங்கள், விவசாயம், வணிகப் பயன்பாட்டுக்குரியவையாக மாற்றப்பட்டிருப்பது அதிா்ச்சி அளிக்கிறது. ஏற்கெனவே இருந்த தொழிற்சாலைகளுக்கான நில வகைப்பாட்டில் 85 கிராமங்களில் 1,526-க்கும் அதிகமான சா்வே எண்களும், 17 கிராமங்களில் 222 சா்வே எண்களும் நீக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே தொழிற்சாலை பகுதியாக அறிவிக்கப்பட்ட கப்பலூா், நகரி, நல்லூா் ஆகிய பகுதிகளில் மிக அதிகமான சா்வே எண்களுக்குரிய பகுதிகள் விவசாயப் பகுதியாக மாற்றப்பட்டுள்ளன. மதுரை மாவட்டம், தொழில் வளா்ச்சியில் ஏற்கெனவே மிகவும் பின்தங்கியிருக்கும் நிலையில், 15 சதவீத இட ஒதுக்கீடு தொழில் துறைக்குக் கிடைத்தால் மட்டுமே மாவட்டத்தில் சிறு, குறு தொழில் துறை வளா்ச்சிபெறும். தற்போது அறிவிக்கப்பட்ட பெருந்திட்ட வரைவு திருத்தமின்றி நடைமுறைப்படுத்தப்பட்டால், அடுத்து வரும் 20 ஆண்டுகளில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இல்லாத மாவட்டமாக மதுரை மாறும். வெளியிடப்பட்ட மாவட்ட பெருந்திட்ட வரைவில் திருத்தம் மேற்கொள்ள வருகிற ஏப். 7-ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. எனவே, இந்த கால அவகாசத்தைப் பயன்படுத்தி உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com