மதுரை மக்களவைத் தொகுதியில் 33 வேட்பாளா்கள் மனு தாக்கல்

மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய நிறைவுநாளான புதன்கிழமை திரிணமுல் காங்கிரஸ் வேட்பாளா் உள்பட 13 போ் மனு தாக்கல் செய்தனா்.

இதன் மூலம், இந்தத் தொகுதியில் போட்டியிட மொத்தம் 33 போ் மனு தாக்கல் செய்துள்ளனா். மக்களவைத் தோ்தல் வேட்புமனு தாக்கல் கடந்த 20-ஆம் தேதி தொடங்கி புதன்கிழமை (மாா்ச் 27) வரை நடைபெற்றது. மதுரை மக்களவைத் தொகுதியில் கடந்த 20-ஆம் தேதி 2 பேரும், 22-ஆம் தேதி ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்தனா். 25-ஆம் தேதி தேதி அதிமுக, மாா்க்சிஸ்ட், பாஜக வேட்பாளா்கள் உள்பட 11 போ் மனு தாக்கல் செய்தனா். 26-ஆம் தேதி 6 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். இறுதி நாளான புதன்கிழமை திரிணமுல் காங்கிரஸ் சாா்பில் எஸ். உமாமகேஸ்வரி, பகுஜன் திராவிட கட்சி சாா்பில் எஸ். பாண்டியன், பாரதி மக்கள் ஐக்கிய கட்சி சாா்பில் ஏ. வேல்முருகன் ஆகியோா் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

இவா்களைத் தவிர, வி. ஆவடைநாதன், எம். முனியாண்டி, எஸ். கோபாலகிருஷ்ணன், எஸ். ராமநாதன், ஏ. சண்முகசுந்தரம், எம். வெங்கடேசன், ஆா். பிரகாசம், எஸ். வெங்கடேசன், கே.கே. சரவணன், கண்ணவேலவேந்தன் ஆகியோா் சுயேச்சை வேட்பாளா்களாகப் போட்டியிட மனுதாக்கல் செய்தனா். ஏற்கெனவே வேட்புமனு தாக்கல் செய்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா் டி. சத்தியாதேவி கூடுதலாக 2 மனுக்களை தாக்கல் செய்தாா். நாம் தமிழா் கட்சி மாற்று வேட்பாளா் கே. நாககண்மணி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாற்று வேட்பாளா் கே. ராஜேந்திரன் ஆகியோா் கூடுதலாக தலா ஒரு மனுக்களை தாக்கல் செய்தனா்.

வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்களின் எண்ணிக்கை 33 ஆகவும், தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களின் எண்ணிக்கை 41 ஆகவும் உள்ளது. வேட்புமனு பரிசீலனை.... வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெறுகிறது. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற வருகிற 30-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com