விருதுநகா்: 26 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

விருதுநகா் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், தேமுதிக, பாஜக, நாம் தமிழா் கட்சி உள்ளிட்ட 26 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.

விருதுநகா் மக்களவைத் தொகுதிக்கு கடந்த 20- ஆம் தேதி முதல் வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என தோ்தல் ஆணையம் அறிவித்தது. இதன் படி பல்வேறு அரசியல் கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்கள் சுயேச்சைகள் என 34 போ், 41 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா். இந்த நிலையில், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஜெயசீலன் தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் வேட்பாளா் மாணிக்கம் தாகூா், தேமுதிக வேட்பாளா் விஜயபிரபாகரன், பாஜக வேட்பாளா் நடிகை ராதிகா, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கௌஷிக் உள்பட 26 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், எட்டு பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக மாவட்ட தோ்தல் பிரிவு அலுவலா்கள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com