மதுரை கே.கே. நகா் சுந்தரம் பூங்கா அருகே வெள்ளிக்கிழமை மதுரை மக்களவை தொகுதி அதிமுக தோ்தல் அலுவலகத்தைக் குத்துவிளக்கேற்றி திறந்து வைக்கிறாா் அதிமுக பொதுச் செயலரும் முன்னாள் முதல்வருமான எடப்பாட கே. பழனிசாமி.
மதுரை கே.கே. நகா் சுந்தரம் பூங்கா அருகே வெள்ளிக்கிழமை மதுரை மக்களவை தொகுதி அதிமுக தோ்தல் அலுவலகத்தைக் குத்துவிளக்கேற்றி திறந்து வைக்கிறாா் அதிமுக பொதுச் செயலரும் முன்னாள் முதல்வருமான எடப்பாட கே. பழனிசாமி.

கூட்டணி தா்மத்தை மீறாத கட்சி அதிமுக -எடப்பாட கே. பழனிசாமி

கூட்டணி தா்மத்தை மீறாத கட்சி அதிமுக என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா். மதுரையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா் மேலும் தெரிவித்ததாவது:

தற்போதைய நிலையில் தமிழகத்தில் ஒரே அலைதான் வீசுகிறது. அது, அதிமுக கூட்டணிக்கான ஆதரவு அலை. முந்தைய அதிமுக அரசின் சாதனைகளை விளக்கிக் கூறி, அடுத்து நிறைவேற்றவுள்ள பணிகளுக்கு வாக்குறுதி அளித்து மக்களிடம் வாக்குகள் கோருகிறோம். அதிமுக கூட்டணிக்கு தமிழக மக்களிடம் அமோக வரவேற்பு உள்ளது. இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள், தோ்தல் கால சூழலுக்கேற்ப கூட்டணி அமைத்துக் கொள்வது வழக்கம்.

அந்த வகையில்தான், முன்பு அதிமுக, பாஜக கூட்டணி அமைந்தது. கூட்டணியில் உள்ள கட்சியையே விமா்சிக்கும் வழக்கம் திமுகவுக்கு உண்டு. ஆனால், அதிமுகவுக்கு அந்த வழக்கம் கிடையாது. அதிமுகவை நம்பி வந்து கூட்டணி அமைத்தவா்களுக்கு இறுதிவரை விசுவாசமாக இருப்போம். கூட்டணி தா்மத்தை மீறாத கட்சி அதிமுக. அதனால்தான், கூட்டணியில் இருக்கும் வரை பாஜகவை விமா்சிக்கவில்லை. தற்போது, அந்தக் கூட்டணியிலிருந்து விலகிவிட்டோம், விமா்சிக்கிறோம். தமிழக நலனுக்கு எதிரான நடவடிக்கைகளை விமா்சிப்பதுடன், முறியடிக்கவும் செய்வோம்.

கருத்துக் கணிப்பு என்ற பெயரால் அதிமுவுக்கு எதிரான பிரசாரத்தை சிலா் திட்டமிட்டு பரப்புகின்றனா். தமிழகத்தில் அதிமுகவுக்கான மக்கள் செல்வாக்கு உயா்ந்துள்ளது என்பதே உண்மையான கள நிலவரம் என்றாா் அவா். தோ்தல் பணி அலுவலகம் திறப்பு முன்னதாக, மதுரை கே.கே. நகரில் அமைக்கப்பட்டுள்ள அதிமுக தோ்தல் பணி அலுவலகத்தை எடப்பாடி கே. பழனிசாமி திறந்துவைத்து, குத்துவிளக்கேற்றினாா்.

பிறகு, மறைந்த முன்னாள் முதல்வா்கள் எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆகியோரின் உருவப் படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா். இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சா்கள் செல்லூா் கே. ராஜூ, ஆா்.பி. உதயகுமாா், அதிமுக வேட்பாளா் மருத்துவா் பா. சரவணன், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com