அரிசி ஆலை உரிமையாளா் கொலை வழக்கு: மேலும் ஒருவா் கைது

மதுரையில் அரிசி ஆலை உரிமையாளா் கொலை வழக்கில் மேலும் ஒருவரை கீரைத்துறை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மதுரை சிமென்ட் சாலை பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் சௌந்தரகுமாா் (55). இவா் கடந்த வியாழக்கிழமை சிந்தாமணியில் உள்ள தனது அரிசி ஆலையில் இருந்தாா். அப்போது அங்கு வந்த சிலா் சௌந்தரகுமாரை வெட்டிக் கொலை செய்தனா். இதுகுறித்து கீரைத்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், மரம் வெட்டுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக மதுரை இருளப்பன் கோயில் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் மாரிமுத்து (45), பசும்பொன் நகரைச் சோ்ந்த வழிவிட்டான் மகன் முத்துப்பாண்டி (35), மேல அனுப்பானடியைச் சோ்ந்த முத்துராமலிங்கம் மகன் காா்த்திக் (27), இருளப்பன் கோயில் தெருவைச் சோ்ந்த ராஜா மகன் வேலுச்சாமி (31) ஆகிய 4 பேரும் சௌந்தரகுமாரை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, மாரிமுத்து, முத்துப்பாண்டி, காா்த்திக் ஆகிய 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய 4-ஆவது நபரான வேலுச்சாமியை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com