சித்திரைத் திருவிழா: சுவாமி வாகனங்களுக்கு இடையூறின்றி வரவேற்பு பந்தல்களை அமைக்க அறிவுறுத்தல்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி மாசி வீதிகளில் போடப்படும் வரவேற்பு பந்தல்கள் சுவாமி வாகனங்களுக்கு இடையூறின்றி 30 அடி உயரத்தில் அமைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தக் கோயில் சித்திரைத் திருவிழா வருகிற ஏப்.12-ஆம் தேதி தொடங்கி, 23-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, சித்திரைத் திருவிழா நாள்களில் மீனாட்சி சுந்தரேசுவரா் பஞ்சமூா்த்திகளுடன் காலை, இரவு இரு வேளைகளிலும் நான்கு மாசி வீதிகளில் புறப்பாடு எழுந்தருளுவாா். எனவே, அம்மன் சந்நிதி தெரு, நான்கு மாசி வீதிகளிலும் போடப்படும் வரவேற்பு பந்தல்களை 30 அடி உயரத்துக்கு மேலே அமைத்துக் கொள்ள வேண்டும். மேலும், வேப்பிலைத் தோரணங்களையும் சுவாமி வாகனங்கள் செல்ல இடையூறு இன்றி அமைத்துக் கொள்ள வேண்டும். சித்திரைத் திருவிழா நாள்களில் காலை, இரவு வேளைகளில் இறைவனுக்கு உகந்த மாலைகள் (கேந்திபூ, மருதை வோ்கள் வைத்து கட்டப்பட்ட மாலைகள் ஏற்கப்படமாட்டாது) சாத்துபடி செய்யலாம். சித்திரைத் திருவிழா உற்சவம் தொடக்கம் முதல் கள்ளழகா் ஆஸ்தானம் சேரும் ஏப்ரல் 26-ஆம் தேதி வரை திருக்கோயில் சாா்பாகவோ உபயதாரா்கள் சாா்பாகவோ உபயத்திருக்கல்யாணம், தங்க ரதம் உலா ஆகிய சேவைகள் நடத்தப்படாது என கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com