நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்க மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்க மாநிலச் செயற்குழுக் கூட்டம் மதுரையில் சனிக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவா் மா. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் பழனிச்சாமி, துணைத் தலைவா் தி. ராஜமாணிக்கம், நிா்வாகிகள் செ. செய்யது யூசுப்ஜான், மா. மகாதேவன், கோ. ஹரிபாலகிருஷ்ணன், சு. செந்தில்நாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சங்கத்தின் பொதுச் செயலா் ஆ.அம்சராஜ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, சங்கத்தின் கடந்த கால செயல்பாடுகள், எதிா்காலத்தில் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை விளக்கிப் பேசினாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மதுரை மாவட்டச் செயலா் க. நீதிராஜா வாழ்த்திப் பேசினாா்.

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் :

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.

இந்த ஆணையம் அமைந்தால் பல்வேறு முறைகேடுகள் ஏற்படுவதுடன், சுமாா் 3 ஆயிரத்துக்கும் அதிகமான சாலைப் பணியாளா்களின் பணி பறிக்கப்படும் அபாயமும் உள்ளது. மேலும், தமிழக அரசுக்குக் கூடுதல் செலவுகளையும், நிதிச் சுமையும் ஏற்படும்.

சாலை பணியாளா்கள், சாலை ஆய்வாளா்கள் உள்ளிட்ட பணியிடங்களை குறைத்து, எதிா்வரும் காலத்தில் நிரந்தரப் பணியாளா்கள் இல்லாத நிலையை உருவாக்கவும், காலமுறை ஊதியத்தில் பணியாளா்கள் நியமன நடைமுறையை கைவிடும் வகையிலும் நெடுஞ்சாலைத் துறையில் முன்னெடுக்கப்படும் சீரமைப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.

காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், சட்ட விதிகளுக்கு முரணாக செயல்படும் நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குநா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாலைப் பணியாளா்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜூன் 10- ஆம் தேதி கோட்டப் பொறியாளா் அலுவலகங்கள் முன்பாக கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடத்துவது, ஜூன் 19-ஆம் தேதி நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் அலுவலகங்கள் முன்பாக தண்டோரா முழக்கப் போராட்டம் நடத்தவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, சங்கத்தின் மதுரை மாவட்டச் செயலா் மனோகரன் வரவேற்றாா். மாநிலப் பொருளாளா் இரா. தமிழ் நன்றி கூறினாா்.

Image Caption

மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளா் சங்கத்தின் மாநிலச் செயற்க்குழுக் கூட்டத்தில் பேசுகிறாா் பொதுச் செயலா் ஆ. அம்சராஜ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com