மதுரை ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைவது எப்போது?

மதுரை ரயில் நிலையத்தின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சா்வதேசத் தரத்துக்கு உயா்த்தும் மேம்பாட்டுப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பது மதுரை மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

தென் தமிழகத்தின் மிக முக்கிய ரயில் நிலையமாக உள்ளது

மதுரை ரயில் நிலையம். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் உள்ளிட்ட ஆன்மிகத் தலங்களையும், தென் மாவட்டங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களையும் இணைக்கும் முக்கியச் சந்திப்பாக இந்த ரயில் நிலையம் உள்ளது.

இங்கிருந்து நாள்தோறும் 96 ரயில்கள் இயக்கப்படுகின்றன. சுமாா் 51 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் இங்கு வந்து செல்கின்றனா். இருப்பினும், பழைமைக்கும், புதுமைக்கும் இடைப்பட்ட கட்டமைப்புகளையும், அடிப்படை வசதிகளையும் கொண்டதாகவே இந்த ரயில் நிலையம் உள்ளது.

இதையொட்டி, மதுரை ரயில் நிலையத்தில் விமான நிலையத்துக்கு இணையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி, சா்வதேசத் தரத்தில் மேம்படுத்த ரயில்வே நிா்வாகம் முடிவெடுத்தது. இதையடுத்து, மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 347.47 கோடியில் மதுரை ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

2061-ஆம் ஆண்டில் உயரக்கூடிய பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்ட தொலைநோக்குத் திட்டமாக இந்தத் திட்டம் வடிமைக்கப்பட்டு, கடந்த 2022-ஆம் ஆண்டு இறுதியில் பணிகள் தொடங்கி நடைபெறுகின்றன.

ரயில் நிலையத்தின் கிழக்குப் பகுதியில் ஒரு முனையம், மேற்குப் பகுதியில் ஒரு முனையம் என இரு முனையங்களைக் கொண்டதாகவும், தமிழா்களின் கலாசாரத்தை, மதுரையின் பழம் பெருமையைப் பறைசாற்றக் கூடிய வகையிலான அழகிய முகப்புடன் கூடியதாகவும் இந்த ரயில் நிலையம் கட்டமைக்கப்படுகிறது.

மேலும், பயணிகள் உள்ளே வருவதற்கும், வெளியே செல்வதற்கும் தனித்தனி பாதைகள், பெரியாா் பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையத்துக்கு சுரங்கப் பாதை , சரக்குப் போக்குவரத்துக்கென தனி தடம், 2 மேல்நிலை பாதைகள் இணைப்புடன் கூடிய வாகனப் பாதுகாப்பகம், தனியாா் வாகனங்களில் வரும் பயணிகளுக்கான அணுகுசாலை, உயா்தர வசதிகளுடன் கூடிய பயணிகள் தங்குமிடம், நடைமேடை விரிவாக்கம், ரயில்வே பாதுகாப்புப் படை அலுவலகம் என பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் இங்கு நடைபெறுகின்றன.

ரயில் நிலையத்தின் கிழக்குப் பகுதியில், 451 இருசக்கர வாகனங்கள், 244 காா்களை நிறுத்தக் கூடிய வகையிலான வாகன நிறுத்தமும், மேற்குப் பகுதியில் 61 காா்களை நிறுத்தக் கூடிய வாகன நிறுத்தமும் கட்டப்படுகிறது. இதுதவிர, கிழக்குப் பகுதி தரைதளத்தில் 700 இருசக்கர வாகனங்ளை நிறுத்தக் கூடிய வாகன நிறுத்தமும் இங்கு கட்டப்படுகிறது.

தற்போதைய நிலையில் ரயில் நிலையத்தின் கிழக்கு முனையம் பகுதியின் தரைதளத்திலும், முதல் தளத்திலும் கற்கள் பதிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. 427 தூண்களில் 299 தூண்கள் நிறுவப்பட்டுள்ளன. கிழக்கு முனையம் அருகே அமையும் இருசக்கர வாகன நிறுத்துமிடத்தின் கட்டமைப்பு, 131 தூண்களைக் கொண்ட காா்கள் நிறுத்துமிட கட்டமைப்பு ஆகிய பணிகள் நிறைவடையவுள்ளன.

முனையத்தின் மேற்குப் பகுதியில் அமையும் வாகன நிறுத்துமிடத்தில் அமைக்க வேண்டிய 58 தூண்களில் இதுவரை 41 தூண்கள் நிறுவப்பட்டுள்ளன.

மேலும், ரயில்வே பாதுகாப்புப் படை அலுவலகம், துணை மின் நிலையக் கட்டடம், நடைமேடை 6, 7-க்கான தரைதளம், சுரங்கப் பாதை, தானியங்கு படிகள், மின்தூக்கிகள் அமைப்பதற்கான அடிப்படை கட்டமைப்புப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

மேல்நிலை நடைபாதை பாலங்கள், படிக்கட்டுகள் அமைக்கும் பணிகள், சரக்குப் போக்குவரத்துக்கான தனி மேல்நிலைப் பாலம் கட்டும் பணி, சுரங்கப் பாதை அமைக்கும் பணி உள்ளிட்ட இதர பணிகள் சீரான வேகத்தில் நடைபெறுகின்றன. இருப்பினும், திட்டமிட்ட காலத்தில் பணிகள் நிறைவடையுமா என்பதில் பொதுமக்களுக்கு சந்தேகம் உள்ளது.

இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே அலுவலா்களிடம் கேட்டபோது, அனைத்துப் பணிகளும் உரிய தரத்தில் தொய்வின்றி நடைபெறுகின்றன. 36 மாதங்களில் பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என்பது இலக்கு. இதன்படி, திட்டமிட்ட காலத்தில் பணிகள் நிறைவடையும். வருகிற 2026-ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையம் மக்களின் பயன்பாட்டுக்கு வருவது உறுதி என்றனா்.

Image Caption

மதரை ஜங்ஷன் ரயில் நிலையத்தின் மாதிரி வடிவம். ~மதரை ஜங்ஷன் ரயில் நிலையத்தின் மாதிரி வடிவம். ~மதுரை ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் விரிவாகப்பணிகள். ~மதுரை ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் விரிவாகப்பணிகள். ~மதுரை ஜங்ஷன் ரயில் நிலையத்தி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com