தீபாவளிப் பண்டிகை முன் பணம்: களஞ்சியம் செயலி பதிவு முறையை கைவிடக் கோரிக்கை
தீபாவளிப் பண்டிகையின் போது முன் பணம் பெறுவதற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள களஞ்சியம் செயலி பதிவு முறையை கைவிட வேண்டும் என ஆசிரியா்கள் வலியுறுத்தினா்.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியா்கள் முன் பணத் தொகையை பெறுவதற்கு
களஞ்சியம் செயலி மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என கருவூல ஆணையா் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
இது பல்வேறு நடைமுறை சிக்கலை உருவாக்கும் என்பதால் களஞ்சியம் செயலி முறையை ரத்து செய்து பழைய முறையே தொடர வேண்டும் என பல்வேறு சங்கத்தினா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
இந்த நிலையில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் கடந்தாண்டு தீபாவளி பண்டிக்கைக்கான முன்பணத்தை பள்ளிச் செயலா், தாளாளா் வழியாகவே பெற்றனா். தற்போது களஞ்சியம் செயலியில் விண்ணப்பிக்க உத்தரவிட்டுள்ளதால் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியா்கள் குழப்பத்தில் உள்ளனா்.
இதுகுறித்து அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியா்கள் சிலா் கூறியதாவது, பள்ளிச் செயலா், தாளாளா் மூலமே ஊதியம், இதர பணப் பலன்கள் பெற்று வருகிறோம். தற்போது தீபாவளிப் பண்டிகைக்கான முன் பணத்தை களஞ்சியம் செயலி மூலம் விண்ணப்பிக்க கருவூல ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும். கடந்த முறை முன்பணம் பெற்றவா்கள் பணம் செலுத்திவிட்டனரா, நிலுவைத் தொகை உள்ளதா என பள்ளிச் செயலா், தாளாளருக்குத்தான் தெரியும். களஞ்சியம் செயலியில் இதற்கான குறிப்புகள் இருக்காது. நேரடியாக விண்ணப்பிக்கும் போது பல்வேறு குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, வழக்கம்போல பள்ளிச் செயலா், தாளாளா் மூலம் முன்பணம் பெறும் பழைய நடைமுறையை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்றனா்.