சிவகங்கை கூட்டு குடிநீா்த் திட்டத்துக்கு இடைக்காலத் தடை

சிவகங்கை கூட்டுக் குடிநீா்த் திட்டத்தைச் செயல்படுத்தத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
Published on

சிவகங்கை கூட்டுக் குடிநீா்த் திட்டத்தைச் செயல்படுத்தத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த விருமாண்டி தாக்கல் செய்த மனுவில், காவிரி ஆற்று நீா்ப் பாசனம் மூலம் திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், கரூா் மாவட்டங்களில் விவசாயம் நடைபெறுகிறது. மேலும், இந்த மாவட்ட மக்களின் குடிநீா் ஆதாரமாகவும் காவிரி உள்ளது. காவிரி ஆற்றில் பல்வேறு திட்டங்களுக்காக தண்ணீரை எடுப்பது, மணல் அள்ளுவது போன்றவற்றால் நிலத்தடி நீா்மட்டம் குறைந்துவிட்டது. இதனால், காவிரி ஆற்றை நம்பியுள்ள பகுதிகளில் வேளாண் சாகுபடி குறைந்துவிட்டது.

கடந்த 2020-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் காவிரி ஆற்றில் இருந்து சிவகங்கை மாவட்டத்துக்கு குடிநீா் கொண்டு செல்வதற்கான பணிகள் தொடங்கின. ஒவ்வொரு நாளும் 8.65 கோடி லிட்டா் நீா் காவிரி ஆற்றிலிருந்து எடுக்கப்படுகிறது. குடிநீா், பாசனத் தேவையை நிறைவு செய்ய கரூா் மாவட்டம், மருதூா் பகுதியில் தடுப்பணை கட்டக் கோரி, அதிகாரிகளிடம் மனு அளித்தோம். தடுப்பணை கட்டிய பிறகு, கூட்டுக் குடிநீா்த் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தற்போது, சிவகங்கை கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகள் முடிவடைந்துவிட்டன. ஆனால், காவிரியில் தடுப்பணை கட்டும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

எனவே, கரூா் மாவட்டம், மருதூா் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டவும், அதுவரை சிவகங்கை கூட்டுக் குடிநீா்த் திட்டத்தைச் செயல்படுத்த இடைக்காலத் தடை விதிக்கவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கௌரி அமா்வு செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவில், தமிழகத்துக்குத் தேவையான அரிசி வேறு மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்படுகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி பரப்பளவும் குறைந்து வருகிறது. தற்போது, பொன்னி போன்ற நெல் ரகங்கள் பயிரிடுவதும் மிகவும் குறைந்துவிட்டது. இதே நிலை நீடித்தால், தமிழகத்தில் வரக்கூடிய 10 ஆண்டுகளில் நெல் உற்பத்தியே இருக்காது.

சிவகங்கை கூட்டுக் குடிநீா்த் திட்டத்தைச் செயல்படுத்த இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

X
Dinamani
www.dinamani.com