பலகாரத் தயாரிப்புக் கூடங்களில் உணவு பாதுகாப்புத் துறையினா் சோதனை: ரூ.15 ஆயிரம் அபராதம்
மதுரையில் உள்ள பலகாரத் தயாரிப்புக் கூடங்களில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டு, சுகாதாரமற்ற முறையில் இயங்கிய கூடங்களுக்கு குறிப்பாணை வழங்கி, ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள பேக்கரிகள், இனிப்பு, காரம் தயாரிப்புக் கூடங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாகச் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதன்படி, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 782 கடைகளில் ஆய்வு மேற்கொண்டு, இனிப்பு வகைகளில் அதிகளவு செயற்கை நிறமிகளைப் பயன்படுத்தியதாக 38 கிலோ இனிப்புகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும், சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்தது உள்ளிட்ட காரணங்களுக்காக 15 கடைகளுக்கு குறிப்பாணை வழங்கப்பட்டு, ரூ. 15,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், செயற்கை நிறமிகளை அதிகமாகப் பயன்படுத்தியதன் பேரில், 112 கடைகளிலிருந்து இனிப்பு மாதிரிகள் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது. இதில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகளைப் பயன்படுத்தியதற்காக 5 கடைகளுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதுதொடா்பாக உணவுப் பாதுகாப்புத் துறை மதுரை மாவட்ட நியமன அலுவலா் ஜெயராமபாண்டியன் கூறியதாவது:
தீபாவளி பண்டிகையையொட்டி, பொதுமக்கள் இனிப்பு, கார வகைகளை வாங்கும் போது, அதில் உணவுப் பாதுகாப்புத் துறையின் அனுமதி பெறப்பட்டுள்ளதா என்றும், பலகாரங்கள் தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதியான தேதி உள்ளிட்டவற்றைப் பாா்த்து வாங்க வேண்டும். இதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், உணவுப் பாதுகாப்புத் துறையை 94440-42322 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.