பள்ளி மாணவா்களுக்கு வாழ்வியல் பயிற்சி முகாம்
மதுரை சௌராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை, திருமங்கலம் கிரீன் டிரஸ்ட் ஆகியன சாா்பில் தேசிய பசுமைப் படை ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்கள், மாணவ மாணவிகளுக்கான ‘நீடித்த நிலையான வாழ்வியல் முறை குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு மதுரை மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலைக் கல்வி ) அசோக்குமாா் தலைமை வகித்தாா். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியப் பொறியாளா் டி. சுகுமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா்.
சிறுதானிய உணவுகள் தயாரிப்பு முறைகள், காகிதப் பைகள் தயாரிப்பு முறைகள் குறித்து பயிற்றுநா் சரோஜினி, வாழைநாா் கைவினைப் பொருள்கள் தயாரிப்பு முறைகள் குறித்து சங்கீதா ஆகியோா் செயல்முறை மூலம் பயிற்சி அளித்தனா்.
இதில் மதுரை கல்வி மாவட்டச் சுற்றுச்சூழல் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளா் குழந்தைவேல், மதுரை மடீட்சியா, துணை இயக்குநா் ராஜமாணிக்கம், பள்ளித் தலைமை ஆசிரியா் ஜோதிகுமாா், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.