பசும்பொன்னில் தேவா் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிப்பு
மதுரை/கமுதி : தேவா் ஜெயந்தி குருபூஜையையொட்டி, பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு வெள்ளிக்கிழமை தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது.
பசும்பொன் முத்துராமலிங்கதேவா் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலைக்கு அணிவிப்பதற்காக, அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவால் கடந்த 2014-ஆம் ஆண்டு 13.5 கிலோ எடையிலான தங்கக் கவசம் வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, இந்தத் தங்க கவசம் ஆண்டு தோறும் அக். 25-ஆம் தேதி தேவா் சிலைக்கு அணிவிக்கப்பட்டு, அக். 30-ஆம் தேதி நடைபெறும் குருபூஜை நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, நவ. 1-ஆம் தேதி அகற்றப்படும். பிறகு, மதுரையில் உள்ள ஒரு வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்தில் இந்தக் கவசம் பாதுகாப்பாக வைக்கப்படும்.
இதன்படி, மதுரை அண்ணாநகரில் உள்ள வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்திலிருந்த தேவா் சிலைக்கான தங்கக் கவசத்தை அதிமுக பொருளாளா் திண்டுக்கல் சீனிவாசன், தேவா் நினைவிடப் பொறுப்பாளா் காந்தி மீனாள் ஆகியோா் வெள்ளிக்கிழமை கையொப்பமிட்டு பெற்றனா்.
பிறகு, முன்னாள் அமைச்சா்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆா்.பி. உதயகுமாா், செல்லூா் கே. ராஜு, நத்தம் விஸ்வநாதன், அதிமுக அமைப்புச் செயலா் வி.வி. ராஜன் செல்லப்பா ஆகியோா் தங்கக் கவசத்துக்கு மாலை அணிவித்து, தேவா் நினைவிடப் பொறுப்பாளா் காந்தி மீனாளிடம் ஒப்படைத்தனா். இதையடுத்து, கமுதி ஆயுதப் படை காவல் ஆய்வாளா் மோகன் தலைமையில் ஆயுதம் ஏந்திய போலீஸாா் பாதுகாப்புடன் இந்தத் தங்கக் கவசம், ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் தேவா் நினைவிடத்துக்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு, தேவா் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் சாா்பில் வழங்கப்பட்ட வெள்ளிக் கவசம் அகற்றப்பட்டு, அதிமுக சாா்பில் வழங்கப்பட்ட தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவை எதிா்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆா்.பி. உதயகுமாா், முன்னாள் எம்.பி. அன்வர்ராஜா, முன்னாள் அமைச்சா் மணிகண்டன், அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலச் செயலா் ராஜ்சத்யன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் முத்தையா, மலேசியா பாண்டியன், சதன்பிரபாகா், ஒன்றியச் செயலா்கள் எஸ்.பி. காளிமுத்து, கருமலையான், ராஜேந்திரன், அவைத் தலைவா் சேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பசும்பொன்னில் தேவா் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டுள்ளதால், 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
வெள்ளிக் கவசம்:
கடந்த 2022-ஆம் ஆண்டு தேவா் குருபூஜை விழாவின் போது, முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் சாா்பில் 16.4 கிலோ எடையுள்ள வெள்ளிக் கவசத்தை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு அணிவிப்பதற்காக நினைவிடப் பொறுப்பாளா்களிடம் வழங்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, இந்த வெள்ளிக் கவசம் பசும்பொன்னில் தேவா் சிலைக்கு அமாவாசை, பௌா்ணமி, திருக்காா்த்திகை உள்ளிட்ட முக்கிய நாள்களில் அணிவிக்கப்படும்.
நிகழாண்டு அக். 1-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை இந்த வெள்ளிக் கவசம் தேவா் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.