கல்லூரி மாணவியை ஆபாசமாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட இருவா் கைது
கல்லூரி மாணவியை ஆபாசமாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட சிறுவன் உள்பட இருவரை மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை மாவட்ட பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவி ஒருவரின் புகைப்படத்தை ஆபாசமாக சமூக வலைதளங்களில் மா்ம நபா் ஒருவா் பதிவிட்டாா். மேலும், அதை நீக்குவதற்கு ரூ. 10 ஆயிரம் கேட்டு அந்த மாணவியை மிரட்டினாா்.
இதுதொடா்பாக, அந்தப் பெண்ணின் தந்தை மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.
அதன்படி மா்மநபரைக் கண்டறிய மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி. கே. அா்விந்த் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டது. போலீஸாரின் விசாரணையில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூா் எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் பாலமுரளி (25), அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் ஆகியோா் இந்தச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, அவா்கள் 2 பேரையும் தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
அவா்களிடம் நடத்திய விசாரணையில் பல கல்லூரி மாணவிகளின் புகைப்படத்தை ஆபாசமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு, பணம் கேட்டு மிரட்டியது விசாரணையில் தெரியவந்தது. குற்றச் செயலுக்கு பயன்படுத்திய கைப்பேசிகள், சிம்காா்டுகள், வங்கி ஏ.டி.எம். காா்டு ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.