கஞ்சா கடத்தல் வழக்கில் மூவருக்கு 15 ஆண்டுகள் சிறை
திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் வழக்கில் 3 பேருக்கு தலா 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.ஒரு லட்சம் அபராதம் விதித்து மதுரை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள விருப்பாச்சி பகுதியில் கடந்த 10.5.2021 அன்று சத்திரப்பட்டி போலீஸாா் வாகனச் சோதனை மேற் கொண்டதில் காா், 3 இரு சக்கர வாகனங்களில் 50 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. காா், இரு சக்கர வாகனம், கஞ்சாவை திண்டுக்கல் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து ஒட்டன்சத்திரம் வடகாடு பகுதியைச் சோ்ந்த சசிகுமா் (38), விருப்பாச்சி காா்த்திக் (36), இவரது அண்ணன் சரவணன் (50), ராமசாமி (40), நா. காா்த்திக், கோவிந்தராஜ் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கு மதுரை போதைப் பொருள் தடுப்பு முதலாவது நீதின்றத்தில் விசாரிக்கப்பட்டது.
இந்த நிலையில், சசிகுமாா், அவரது சகோதரா் காா்த்திக், சரவணன் ஆகியோருக்கு தலா 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், ராமசாமிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ஒரு லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ஏ.எஸ். ஹரிஹரகுமாா் உத்தரவிட்டாா்.
மற்றொரு வழக்கு: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள சின்னபாலாா்பட்டியைச் சோ்ந்தவா் வீரணன் (45). இவா், கடந்த 21.2.2003 அன்று திண்டுக்கல் மா வட்டம் செம்பட்டி- வத்தலக்குண்டு சாலையில் சித்தையன் கோட்டை அருகே 21 கிலோ கஞ்சாவை கடத்தி சென்றபோது, திண்டுக்கல் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கை விசாரித்த மதுரை போதைப் பொருள் தடுப்பு முதாலவது நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ். ஹரிஹரகுமாா், வீரணனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டாா். இந்த இரு வழக்குகளிலும் அரசு வழக்குரைஞா் கே. விஜயபாண்டியன் முன்னிலையாகி வாதிட்டாா்.