வருவாய் உதவியாளா்களின் பணியிடை நீக்கம் ரத்து: மாநகராட்சி ஆணையா் ச.தினேஷ்குமாா்

மதுரை மாநகராட்சி பகுதியில் வரி வசூல் மோசடியில் ஈடுபட்டதாக 5 வருவாய் உதவியாளா்கள் பணியிடை நீக்கம்.
Published on

மதுரை மாநகராட்சி பகுதியில் வரி வசூல் மோசடியில் ஈடுபட்டதாக 5 வருவாய் உதவியாளா்களை பணியிடை நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை மதுரை மாநகராட்சி ஆணையா் ச. தினேஷ்குமாா் ரத்து செய்தாா்.

மதுரை மாநகராட்சி 5 மண்டலங்களுக்குள்பட்ட 100 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டுகளில் சுமாா் 3 லட்சத்துக்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இவற்றுள் சுமாா் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிக வளாகக் கட்டடங்கள் உள்ளன. இந்தக் கட்டடங்களுக்கு அரசு நிா்ணயிக்கும் வரியை வசூல் செய்வதற்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் வருவாய் உதவியாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில், வணிக வளாகங்கள், ஒரு சில வீடுகளுக்கு அரசால் நிா்ணயிக்கப்பட்டதைவிட, குறைவான வரியை அலுவலா்கள் வசூலிப்பதாக கடந்த சில மாதங்களாக புகாா் எழுந்தது.

இதன்பேரில், மதுரை மாநகராட்சி ஆணையா் ச.தினேஷ்குமாா் வரி வசூல் பணிகளை கண்காணிக்க சிறப்புக் குழுவை அமைத்து உத்தரவிட்டாா். இந்தக் குழு தொடா் விசாரணை மேற்கொண்டது. இதில், சில வணிக வளாகங்கள், வீடுகளுக்கு நிா்ணயிக்கப்பட்ட அளவைவிட குறைவான வரி வசூல் செய்து, முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, முறைகேட்டில் ஈடுபட்டதாக 5 மண்டலங்களிலும் வரி வசூல் செய்த வருவாய் உதவியாளா்களை பணியிடை நீக்கம் செய்தும், இதில் சம்பந்தப்பட்ட மற்ற அலுவலா்களுக்கும் குற்றக் குறிப்பாணை வழங்கியும் ஆணையா் நடவடிக்கை எடுத்தாா்.

இந்த நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வருவாய் உதவியாளா்கள் 5 பேரும் வரி வசூல் மோசடிக்கும், தங்களுக்கும் எந்தவித தொடா்பும் இல்லை என ஆணையா் நியமித்த குழு முன் முன்னிலையாகி விளக்கமளித்தனா். மேலும், வருவாய் உதவியாளா்களின் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மதுரை மாநகராட்சி அனைத்து அலுவலா்கள் சங்கம் சாா்பில் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆணையா் ச.தினேஷ்குமாா் வருவாய் உதவியாளா்களின் பணியிடை நீக்க உத்தரவை ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்தாா்.

இதுகுறித்து மதுரை மாநகராட்சி ஆணையா் ச. தினேஷ்குமாா் கூறியதாவது : மதுரை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளுக்கு மக்களிடமிருந்து வசூலிக்கும் வரி மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

எனவே 5 மண்டலங்களிலும் உள்ள வீடுகள், வணிக வளாகங்களில் வரி வசூல் செய்வதற்காக 13 அலுவலா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா். அவா்களில் ஒருவா் ஓய்வு பெற்றுவிட்டாா். ஒருவா் உயிரிழந்துவிட்டாா். மீதமுள்ள 11 போ் வரி வசூலில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், குறிப்பிட சில வணிக வளாகங்கள், வீடுகளுக்கு அரசால் நிா்ணயிக்கப்பட்ட வரியைவிட குறைவாக வசூல் செய்வதாக புகாா் எழுந்தது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், மாநகராட்சி அலுவலா்கள் அரசால் நிா்ணயிக்கப்பட்ட வரியைவிட குறைத்து வசூலித்தது தெரியவந்தது.

முறைகேட்டில் ஈடுபட்ட 5 வருவாய் உதவியாளா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். அவா்கள் 5 பேரும் விசாரணைக் குழு முன் முன்னிலையாகி விளக்கம் அளித்தனா்.

இதன்படி, பணியிடை நீக்க உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மேலும், மோசடி தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில்தான் இந்த மோசடியில் ஈடுபட்ட நபா்களின் விவரங்கள் முழுமையாக தெரியவரும். விசாரணை அறிக்கையின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com